நாம ஜெயிச்சுட்டோம்..வாரிசு கொடுத்த வெற்றி! ஈசிஆர் ஹோட்டலில் சக்சஸ் பார்ட்டி..ரகசியமாக கொடுத்த விஜய்?
சென்னை : பல சர்ச்சைகள் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வாரிசு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வெற்றி பெற்றதாக நடிகர் விஜய் பட குழுவினருக்கு ரகசிய பார்ட்டி வைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அரிதாரம் பூசி தற்போது வாரிசு மூலம் தமிழ் திரை உலகில் தானும் ஒரு வசூல் சக்கரவர்த்தி என நிரூபித்தவர் நடிகர் விஜய். இடையில் சூப்பர் ஸ்டார் என சர்ச்சைகள் வந்தது தனிக்கதை.
ஆரம்பத்தில் ஆபாச வசனங்கள், முகம் சுளிக்கும் காட்சிகள் உருவ கேலி என தொடர் விமர்சனங்களுக்கு ஆளானாலும் அதன் பிறகு தனது முயற்சியால் தனி இடத்தை தற்போது பிடித்திருக்கிறார் இளைய தளபதியாக இருந்து தளபதியாக மாறியிருக்கும் விஜய்.

நடிகர் விஜய்
ஆரம்பத்தில் நாளைய தீர்ப்பு ரசிகன் உள்ளிட்ட சில திரைப்படங்கள் கை கொடுக்காத நிலையில் செந்தூரப்பாண்டி, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்கள் மூலம் வெகுஜன ரசிகர்களை ஈர்த்து குடும்பத்தில் ஒருவராய் தனது பாதையை மாற்றிக் கொண்டு இடம் பிடித்தார், அதற்குப் பிறகு திருமலை, திருப்பாச்சி, சிவகாசி, துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் ஆக்சன், காமெடி, நடனம் என கலந்து கட்டி கொடுத்து தற்போதைய சூழலில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

குடும்பப் படம்
இந்த நிலையில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த அவருக்கு பீஸ்ட் படம் சற்று சறுக்கலாக அமைந்தது. படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக பட குழுவினர் கூறினாலும் விஜயின் ரீடண்ட் கேரியரில் சற்று அடி வாங்கிய படம் என்றால் அது பீஸ்ட் தான். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தி வந்த விஜய் தனது ஹீரோயின் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பப்பாங்கான படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறிவந்தனர்.

வாரிசு
அதையடுத்து அவர் தேர்ந்தெடுத்த படம் தான் வாரிசு. தெலுங்கில் பிரபல இயக்குனரான வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்ற தகவல் வெளியான போதே பல விமர்சனங்கள் விழுந்தது. தொடர்ந்து தியேட்டர் பிரச்சினை, தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் என அடுத்தடுத்து சறுக்கல்களை சந்தித்த வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி இருக்கிறது.

பாடல்கள் ஹிட்
இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா,சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ராதிகா, யோகி பாபு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இந்த படத்திற்கு முதன்முறையாக இசையமைத்துள்ளார் தமன். அவரது இசையில் வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா பாடல் உள்ளிட்டவை யூட்யூபில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது.

வாரிசு வெற்றி?
இந்த நிலையில் வாரிசு படத்துடன் நடிகர் அஜித்தின் துணிவு படமும் சேர்ந்து கொள்ள பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியது. தற்போதைய சூழலில் துணிவு படம் தான் வெற்றி என அஜித் ரசிகர்களும் வாரிசு படம் தான் வெற்றி என விஜய் ரசிகர்களும் கூறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க பொங்கல் ரேஸில் இரு படங்களுமே ஓரளவு வசூலை ஈட்டி இருக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற வகையில் இரு படங்களும் 100 கோடி ரூபாய் வசூலை உலகெங்கும் ஈட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் விஜயின் வாரிசு படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிக் கொண்டாட்டம்
இந்நிலையில் வாரிசு படத்தின் வெற்றியை நடிகர் விஜய் பட குழுவினருடன் கொண்டாடியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த காலங்களைப் போல் வெளிப்படையாக பட வெற்றியை படக்குழு கொண்டாடாமல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சக்சஸ் பார்ட்டி மிகவும் எளிமையாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த பார்ட்டிக்கான முழு செலவையும் நடிகர் விஜய் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரகசியமாம்..
இந்த விருந்தில் நடிகர் விஜய் படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா மற்றும் சில தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே கலந்து கொண்டதாகவும் இந்த சக்சஸ் பார்ட்டி ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் அப்படி எல்லாம் சக்ஸஸ் பார்ட்டி விஜய் வைக்கவில்லை எனவும் சில சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ பொங்கல் விடுமுறை இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் பொங்கல் ரைஸில் வெற்றி பெற்றது வாரிசா அல்லது துணிவா என்பது தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications