தவெக விஜய்க்கு முளைத்த சிக்கல்.. மாநாட்டுக்கு இடம் தர மறுக்கும் உரிமையாளர்கள்? எவ்வளவோ பண்ணிட்டோம்.!
சென்னை: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த ஏற்பாடுகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் திருப்தி அளிக்கும் வகையில் இடம் அமையவில்லையாம்.. அமைந்த இடங்களையும் பல்வேறு காரணங்களை சொல்லி மறுத்து வருகிறார்களாம் இடத்தின் உரிமையாளர்கள். இதன் பின்னணியில் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் திட்டம் இருப்பதாகச் சொல்கின்றனர் விஜய்யின் ஆதரவாளர்கள்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய். தி கோட் படத்திற்கு பிறகு முழு அரசியலில் அவர் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே விஜய் அரசியல் ஆர்வத்தில் தான் இருக்கிறார். அதற்கு அச்சாரமாக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். தொடர்ந்து அந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்கள் விவகாரம், காவிரி நதிநீர் பிரச்சினை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற பல்வேறு விவகாரங்களில் விஜய் நேரடியாக களத்தில் இறங்கியது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என பேசப்பட்ட நிலையில் அவரே அதனை வெளிப்படையாக அறிவித்தார் .அவரது கட்சி அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அன்றே கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்க உள்ளதாகவும் விரைவில் அதன் கொள்கைகள் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
மேலும் முழு அரசியலில் ஈடுபடும் பொருட்டு படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என தெரிவித்து இருந்தார். தற்போது கோட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும், பிரமோஷன் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு படத்தில் நடிகர் விஜய் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளியே இருக்கும் நிலையில் சினிமாவில் இனி நடிப்பது சிரமம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதற்கிடையே மாணவர்கள் சந்திப்பு, ட்விட்டர் அரசியல் என பிசியாக இருந்த விஜய் தீவிர தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் அவரது முதல் மாநில மாநாடு நடக்கும் எனக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மண்டல மாநாடுகள், தொகுதி வாரியாக மக்களைச் சந்திக்கும் பயணம் உள்ளிட்ட அவற்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கும் நிலையில் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு எங்கு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்டவை அந்த பட்டியலில் இருந்தன. ஈரோடு கோவை உள்ளிட்ட பகுதிகளில் மாநாடு நடத்தினால் போதிய அளவில் இடம் இருக்காது என நிர்வாகிகள் கருதினர். இதை அடுத்து மதுரை அல்லது திருச்சியில் விஜய் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடம் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் மாநில மாநாட்டை நடத்துவதற்கு ஆரம்பத்திலேயே சிக்கல் எழுந்திருக்கிறது. மாநாடு நடத்த பெரிய அளவில் இடம் தேவைப்படும். மாநாடு நடக்கும் இடம் மட்டுமல்லாது, பார்க்கிங், உணவு சமைப்பது, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் செய்து தர வேண்டும். இதற்கு ஏற்றார் போல் இடம் அமைய வேண்டும். மேலும் அனைவரும் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளும் இருக்க வேண்டும் என்பதால் பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இப்படி இறுதியாக தேர்வு செய்யப்பட்டது தான் திருச்சி, மதுரை. ஆனால் அங்கும் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்தவுடன் காலையில் மாநாடு நடத்த இடம் தருவதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர்கள், மாலையில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்து வருவதாக கூறப்படுகிறது .இந்த தகவல் விஜய்யின் காதுகளுக்கும் எட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேட்டபோது பிரபல அரசியல் கட்சி ஒன்றின் மூத்த நிர்வாகிகள் விஜய்க்கு மாநாடு நடத்த இடம் தரக் கூடாது என நேரடியாகவே சொன்னதாக தெரிவிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பல்வேறு வகைகளிலும் நெருக்கடி வரும் என உரிமையாளர்கள் நிலம் தர மறுக்கிறார்கள் எனக் கூறியுள்ளனர். இதனால் சற்றே அப்செட் ஆனாலும் செப்டம்பர் மாதத்தில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாட்டை நடத்திய தீருவேன் என்று உறுதியில் இருக்கிறாராம் விஜய். மேலும் எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நிர்வாகிகளிடம் கூறிய விஜய் மாநாட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.. தானாகவே எல்லாம் நடக்கும் எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்” என நம்பிக்கை அளித்து இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications