விஜய் தீவிரவாதியை போல மக்களை தூண்டுகிறார்.. சர்கார் பற்றி அமைச்சர் சிவி சண்முகம் கடும் விமர்சனம்!
சர்கார் படம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: சர்கார் படம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்து இருக்கிறார். நடிகர் விஜய் தீவிரவாதியைப்போல மக்களிடம் வன்முறையை தூண்டுகிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள், பொது மக்கள் முதல் நாளில் இருந்து படத்தை பார்த்துவிட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
படம் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சர்கார் படத்தை பற்றி அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்கள் முட்டாள்களா?
அவர் தனது பேட்டியில், எப்போதும், யாராவது ஒருவர் எழுதித் தரும் வசனதத்தை அப்படியே பேசி பேசி பழக்கப்பட்டவர்கள், அதேபோல் வசனம் பேசி மக்களிடம் தங்கள் நாடகத்தை அரங்கேற்ற பார்க்கிறார்கள். மக்கள் இதை எல்லாம் நம்ப மாட்டார்கள். இதை நம்பி நடிகர்கள் பின் செல்ல மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

சர்கார் படம்
சர்கார் படத்தின் மூலமாக ஒரு நடிகர் முதல்வராவது குறித்து பேசியுள்ளார். மூன்று மணி நேரத்தில் நேரடியாக முதல்வராவது எப்படி என்று அவர் கற்பனை செய்து கற்பனை உலகத்திலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார். வேறு ஒரு நபரின் கதையைத் திருடி, வேறு ஒரு நபரின் பணத்தில் நடித்து, தியேட்டரில் பணம் வசூலிக்கும் ஒருவர் தமிழக அரசை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் சரியாகும்.

எப்படி இதெல்லாம் சரி
இவர்கள் படமும் எடுக்கிறேன் என்ற போர்வையில் அரசின் திட்டங்களின் பொருட்களை எரிப்பது மிக மிக தவறு. நடிகர் விஜய் தீவிரவாதியைப்போல மக்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டுள்ளார். வேண்டும் என்றே இவர்கள் இந்த செயலை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

கண்டிப்பாக நடவடிக்கை
அந்த படத்தில் நடித்த விஜய், படத்தை தயாரித்தவர் நிறுவனம், இயக்கியவர், திரையரங்க உரிமையாளர்கள் எல்லோரும் உத்தமர்கள் போல், இவர்கள் அனைவரின் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க சட்டத்துறை ஆலோசனை செய்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசுக்கு வலியுறுத்துவேன். இந்த நடிகருக்கு வெளிநாட்டு சத்தியாளர்களுடன் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் எந்த நலத்திட்டமும் செயல்படக் கூடாது என வெளிநாட்டு சதிக்கூட்டத்துடன் இவர்கள் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்று கடுமையாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications