அரசியல் "ஸ்டண்ட் அடிப்பதிலும்" அடுத்த ரஜினிதானா விஜய்? படங்களை ஓட வைக்க அரசியல் ஒரு ஆயுதமா?
சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் ரஜினி பாணியிலேயே போய்கொண்டு இருப்பதால் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த கேள்விக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன் முடிவுரை எழுதினார். அதற்கு முன் அரசியலுக்கு வருவதற்கான பல்வேறு அறிகுறிகள் அவரது நடவடிக்கைகளில் தென்பட்டன. தனது ரசிகர் மன்றம் மூலமாக மக்கள் நலத்திட்ட உதவிகளை செய்த அவர், அரசியல், ஆன்மீகம், ஊழல், சமூகநீதி என பல்வேறு கதையம்சங்களை கொண்ட படங்களிலும் நடித்தார். ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களை தெரிவித்து எதிர்வினைகளை சந்தித்தார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சை வரை நடிகர் ரஜினியையே பின்பற்றுகிறார் என விஜய் பற்றி சினிமா நோக்கர்கள் தெரிவித்து வரும் நிலையில், அரசியலுக்கு வரும் விசயத்திலும் ரஜினியை அவர் பின்பற்றுகிறாரோ என்ற கேள்வி எழாமல் இல்லை. நடிகர் ரஜினியாவது ஒரு காலத்தில், ஜெயலலிதா வந்தால் இனி ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று கூறினார். ஆனால், அரசியலுக்கு வருவதை பூடகமாக வெளிப்படுத்தி வரும் விஜய் இதுவரை எந்த அரசுக்கும் எதிராக ரஜினிபோல் பேசியதில்லை.
2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு சமயத்தில், "இந்த நடவடிக்கையை தவிர்த்து இருக்கலாம்." என விஜய் சாஃப்டாக பேட்டி கொடுத்ததை தவிர வேறு எதையும் லிஸ்டில் சேர்க்க முடியாது. அந்த பேட்டிக்கு பிறகு வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான வசனத்தை காரணம் காட்டி பாஜக விஜய்க்கு நெருக்கடி கொடுத்தது. 2ஜி டயலாக்கை கத்தி படத்தில் கத்தி கத்தி பேசிய விஜய், மெர்சலில் பாஜகவுக்கு எதிராக பேசி ஒன்றோடு ஒன்று மேட்ச் செய்துவிட்டார். 2ஜி பற்றி பேசியிருந்தாலும் திமுக குடும்ப உறுப்பினர் எடுக்கும் படங்களில் அவர் அதிகளவில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்க்கார் பட ஆடியோ லாஞ்ச் நிகழ்வில் அரசியலுக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என கூறினார்.
சிஸ்டம் சரியில்லை என்று கூறி 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்கும் முயற்சியில் இறங்கிய ரஜினி, ஆன்மீக அரசியல் என புதிய கொள்கையை கொண்டு வந்து ரசிகர்கள் சந்திப்பை நடத்தி கட்சியை கட்டமைப்பதற்கான பொறுப்பாளர்களையும் அறிவித்தார். என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ரஜினி. மறுபக்கம் அடுத்த தலைமுறை நடிகரான விஜய்யும் அரசியலுக்கான அஸ்திவாரத்தை போட்டார்.
தலைவா படத்தில் டைம் டு லீட் என பெயர் வைத்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் பகையை சம்பாதித்த நாள் முதல் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் தொடர்ந்துகொண்டே வருகின்றன. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அவரது நடவடிக்கைகள் அமைந்து உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு கலந்துகொண்டது, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா குடும்பத்தை இரவில் சென்று சந்தித்தது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவியது என பல்வேறு சம்பவங்களை சொல்லலாம்.
அதேபோல், உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறக்கினார். அண்ணல் அம்பேத்கர், காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், தீரன் சின்னமலை, சிவந்தி ஆதித்தனார் போன்ற தலைவர்களின் பிறந்தநாளன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மரியாதை செலுத்த சொன்னது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியது என பல்வேறு நிகழ்வுகள் அவர் அரசியலுக்கு அடித்தளமிடுவதை காட்டின.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்தவர்களுக்கு பொதுவாக கல்வி மாவட்டம், மாவட்டம், வட்டாரம், மாநில அளவில் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தொகுதி அளவில் விஜய் பரிசுகளை வழங்கியது அரசியலுக்கான நகர்வாகவே பார்க்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜரை படியுங்கள் என்று மாணவர்களிடம் அறிவுறுத்திய விஜய், ஓட்டுக்கு பணம் வாங்குவது பற்றியும் பேசினார். வெங்கட் பிரபு படத்துக்கு பிறகு விஜய் அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டசபைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார் என்றும் செய்திகள் பரவின.
மாஸ்டர் படப்பிடிப்பின்போது விஜய்க்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையால் நெய்வேலில் பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் படிப்பிடிப்பு தளத்தில் திரண்டது பெரும் எழுச்சியாக பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு மொத்தமாக அரசியலில் சைலண்ட் மோடுக்கு சென்ற விஜய், மக்கள் இயக்கம் மூலமாக அரசியல் காய் நகர்த்தல்களை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற லியோ வெற்றி விழா நிகழ்வில், 2026 பற்றி நெறியாளர் கேள்வி கேட்டதும், கப்பு முக்கியம் பிகிலு என்று குறியீடாக அவர் சொல்லி இருக்கிறார். ஆனால், அரசியல் வருகை குறித்து தெளிவாக எதையும் அறிவிக்காமல் குறியீடு மூலம் மக்களையும் ரசிகர்களையும் குழப்புகிறார் விஜய் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுபக்கம் விஜய் தனது படங்களை ஓட வைப்பதற்காக, அப்படங்களின் விழாக்களில் அரசியல் தொடர்பாக பேசி, எப்போது பரபரப்பில் வைத்திருக்க நினைக்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications