விஜய் கட்சி பெயரைக் கவனித்தீர்களா? அது என்ன ‘கழகம்’? அர்த்தம் என்ன?
சென்னை: தனது புதிய கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கடந்த சில மாதங்களாகவே தகவல் கசிந்து வந்தது. அதற்காக அவர் தனது நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி களம் இறங்கும் என்றும் பேச்சுகள் அடிப்பட்டன.

இந்நிலையில் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமான தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயர் வைத்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் 2024 மக்களவைத் தேர்தலில் தனது கட்சி யாரையும் ஆதரிக்காது என்றும் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட உள்ளதாகவும் அரசியல் என்பது தொழில் இல்லை என்றும் அது தனது லட்சியம் என்றும் கூறி இருக்கிறார்.
சமீபத்தில் திரைத்துறையிலிருந்து வந்த நடிகர் கமல்ஹாசன், தனது கட்சிக்கு 'கழகம்' என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். திராவிட இயக்கங்களின் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் உருவான புதிய கட்சிகள் அனைத்தும் தனதுப் பின்னால் 'கழகம்' என்ற சொல்லைத்தான் அதிகம் பயன்படுத்தி வந்துள்ளன. ஆனால், கமல் அதற்கு நேர்மாறாக இருந்தார். அதேபோல் சரத்குமார் கூட தனது கட்சியில் கழகம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தவிர்த்துவந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய், ஊழல் நிறைந்த ஆட்சியைத் தரவே தான் கட்சி தொடங்கி உள்ளதாக விளக்கம் அளித்துவிட்டு, அதே கழகங்கள் வரிசையில் தன் கட்சிக்குத் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ளார். இதன் மூலம் இவரும் கழகங்கள் வரிசையில் அரசிலை முன்வைக்கப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அது சரி கழகம் என்றால் என்ன? ஏன் எல்லோரும் கழகம் என்று கட்சிக்குப் பின்னால் இணைத்துக் கொள்கிறார்கள்?

திமுகவை அண்ணாதுரை 1949இல் தொடங்கியபோது அவரது கட்சிக்கு ஆங்கிலத்தில், 'டிரவிடியன் புரொக்ரசிவ் ஃபெடரேஷன்' (Dravidian Progressive Federation) என்றே பெயர் வைத்தார். அப்போது டிஎம்கே எனச் சுருக்கி வைக்கவில்லை.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'நம்நாடு' நாளேட்டில் Dravidian Progressive Federation என்ற பெயரே குறிப்பிடப்பட்டது. அண்ணாதுரை ஆங்கிலத்தில் எழுதும்போது 'டிபிஃஎப்' என்றே தன் பத்திரிகையில் அச்சிட்டார்.

ஆனால் 'தி இந்து' நாளிதழ் ஆங்கிலத்தில் எழுதும் போது 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்பதைச் சுருக்கி 'டி.எம்.கே' என்றே எழுதிவந்தது. இதன் பின்னால், அண்ணாதுரையும் டி.எம்.கே' என்பதையே எழுதத் தொடங்கினார்.
திமுகவிற்கு முன்பாகவே 1946இல் 'தமிழரசுக் கழகம்' என்ற பெயரில் ம.பொ.சி தனது கட்சிக்குப் பெயரிட்டிருந்தார். இந்த அரசியல் இயக்கங்களுக்கு முன்னதாக 'கழகம்' என்ற சொல்லைத் திருநெல்வேலியில் இயங்கிவந்த 'சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்'தான் பிரபலப்படுத்தியது. இதன் பின்புலமாகத் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான மறைமலையடிகள் இருந்தார். இந்தப் பதிப்பகத்தின் வெளியீடுகளுக்கு 'கழக வெளியீடு' என்றே மக்கள் மத்தியில் அறியப்பட்டது.

சங்கம் என்பது சமஸ்கிருதம் சார்பு. ஆகவே அதற்கு இணையாக 'கழகம்' என்பதைப் பயன்படுத்தினார்கள். 'கழகம்' என்பதற்கு ஒன்றாகக் கூடியிருந்து காரியங்களைச் செய்யும் இடம் என்பது பொருள். இது ஒரு தூயத் தமிழ்ச் சொல். பின்னர்தான் 'கட்சி' என்ற சொல்லைப் பலரும் பயன்படுத்த ஆரம்பித்தனர். அந்த அடிப்படையில்தான் 'பல்கலைக்கழகம்' என வந்தது.
தூய தமிழியக்கத்து ஆட்கள், 'சங்க இலக்கியங்களைக்கூட 'கழக இலக்கியம்' என்றே குறிப்பிட்டு வந்தனர். தேவநேய பாவாணரும் 'கழக இலக்கியம்' என்றே கூறிவந்தார்.
திருக்குறள் 'கழகம்' என்பதைச் சூதாடும் இடம் என்றே குறிப்பிடுகிறது. ' பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்; கழகத்துக் காலை புகின்' என்கிறது திருக்குறள். கம்பராமாயணத்தில், 'கந்தனை யனையவர் கலைதெரி கழகம்' என்று வருகிறது. இதற்குக் கல்வி பயிலும் இடம் என்று பொருள்.

'கழகம்' என்ற சொல்லை வைத்து அறிஞர் வையாபுரிப் பிள்ளை தனிக் கட்டுரையே எழுதி இருக்கிறார். திமுக 'கழகம்' என்ற சொல்லைப் பயன்படுத்திய பின்னால் அதற்கு ஒரு அறிவார்ந்த அர்த்தம் உருவானது.
முற்காலத்தில் தமிழ்ச் சங்கங்களுக்கு 'கழகம்' எனப் பெயர் இருந்தது. அதாவது 'முதற்கழகம்', 'இடைக் கழகம்', ' கடைக் கழகம் ' என அழைக்கப்பட்டது. இந்தக் கழகங்களுக்கு அறிவார்ந்த சபை என அர்த்தம்.

இங்கே அதிகமான விவாதங்கள் நடைபெறும். சுருக்கமாகச் சொன்னால், இதை சாக்ரடீஸ் உரையாடலுக்கு இணையானது எனலாம். பரஞ்சோதி முனிவர், 'கழகம்' என்ற சொல்லைக் குறிப்பிடுகிறார். மேலும் 'கழகம்' குறித்து தேவநேய பாவாணர் நிறைய எழுதி இருக்கிறார்.

இந்தச் சொல் எந்த அளவுக்குக் கவனம் பெற்றுள்ளது என்பதை விளக்குவதற்கு ஒரு உதாரணம். மூத்த அரசியல்வாதி ராம்ஜத் மலானி சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கட்சியைத் தொடங்கினார். அதற்கு அவர், 'பவித்ர இந்துஸ்தான் கழகம்' என்றுதான் வைத்தார்.

இந்தக் 'கழகம்' என்ற சொல்லைப் பெரியார் வைப்பதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஒரு சிறிய கட்சி, 'திராவிடர் கழகம்' என்ற பெயரில் இயங்கிவந்தது. அதைக் கொண்டே பின்னால் பெரியார் அதே பெயரில் தனது சீர்திருத்த அமைப்பைத் தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியாகவே இப்போது நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயர் வைத்துள்ளார். அந்தக் கழகத்தில் கலகம் வராமல் இருக்க நமது வாழ்த்துகள்!












Click it and Unblock the Notifications