"அண்ணன் விஜயகாந்த் எனக்கு செய்த உதவி.." நெகிழ்ச்சியாக பேசிய நடிகர் விஜய்.. டிரெண்டாகும் பழைய வீடியோ
சென்னை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று மறைந்த நிலையில், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே கேப்டன் விஜயகாந்த் குறித்து நடிகர் விஜய் முன்பு பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று இப்போது டிரெண்டாகி வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த அவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்தே வந்தார்.

கடந்த மாதம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விஜயகாந்த் மறைவு: இம்மாத தொடக்கத்தில் அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார். கடந்த டிசம்பர் 14இல் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்த நிலையில், அதில் விஜயகாந்த் கலந்து கொண்டார். வீல் சேரில் விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார். அவர் கடைசியாகக் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி அதுதான். விஜயகாந்த் உடல்நிலை நலிவுற்று இருந்த நிலையில், அவரது தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் அதைப் பார்த்துக் கதறி அழுதனர்.
இதற்கிடையே விஜயகாந்த்திற்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவர் வழக்கமான மருத்துவ சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக முதலில் கூறினர். இருப்பினும், உடல்நிலை மோசமான நிலையில், நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். அவர் நுரையீரல் அழற்சி அதாவது pneumoniaவால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
விஜய் அஞ்சலி: நேற்று முதலே பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் நேற்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்த விஜய் கண்களில் இருந்து நீர் கொட்டியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
விஜய்க்கு ஆரம்பக் காலத்தில் படங்கள் பெரிதாகப் போகவில்லை. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான படம் செந்தூர பாண்டி. விஜய்யின் வளர்ச்சிக்காக அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் விஜயகாந்த்.. தனது வெற்றிக்குக் காரணமான இயக்குநர்களில் எஸ்.ஏ.சி.யும் ஒருவர் என்பதால், செந்தூரபாண்டி படத்திற்கு விஜயகாந்த் சம்பளம் கூட வாங்கவில்லை. இப்படி விஜய்யின் தொடக்கக் காலத்தில் அவருக்குப் பெருமளவு உதவியவர் விஜயகாந்த்.

நெகிழ்ச்சி: இதற்கிடையே மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்து நடிகர் விஜய் முன்பு பேசியிருந்த பழைய வீடியோ ஒன்றை இப்போது பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அதில் விஜய், "பொதுவாக ரசிகர்களில் கிளாஸ் ரசிகர்கள், மாஸ் ரசிகர்கள் என இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள். அதில் இந்த மாஸ் ரசிகர்கள் ஒரு நடிகனை நடிகராக ஒப்புக்கொள்ள வேண்டும். அன்றும் சரி, இன்றும் சரி பெரிய ஹூரோவாக அது ரொம்ப முக்கியம்.
அண்ணன் விஜயகாந்த்தை வைத்து எனது தந்தை ஒரு படம் எடுக்கும் போது, அதில் அவரது தம்பியாக என்னை நடிக்க வைத்தாரு. விஜயகாந்த் சாரை பார்க்க வரும் ரசிகர்களுக்கு, அவர் மூலம் அந்த படம் மூலம் நான் அறிமுகமாகிறேன். இதற்காகத் தான் அந்த படத்தை எடுத்தார்கள். அந்த படம் வெற்றியும் அடைந்தது. நாங்கள் நினைத்தது நடந்தது" என்று கூறியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நல்லடக்கம்: விஜயகாந்த்தின் உடல் முதலில் அவரது தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அங்கே கூட்டம் அதிகரித்த நிலையில், இன்று அதிகாலை அவரது உடல் சென்னை தீவுத்திடலிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications