13 மணி நேர நிகழ்ச்சி.. மேஜையை பிடித்த விஜய்.. நிர்வாகிகளை கடிந்து கொண்டாரா?
சென்னை: பொதுத் தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா 13 மணி நேரம் நடைபெற்றதால் நடிகர் விஜய் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது.
நடிகர் விஜய் சினிமாவில் சாதித்தது போல் அரசியலிலும் ஒரு ரவுண்ட் வர ரசிகர்கள் விரும்புகிறார்கள். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது போல் எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு நிறைய முன்னோட்டங்கள் உள்ளன.
அம்பேத்கர் பிறந்தநாள் அன்று 234 தொகுதிகளிலும் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உத்தரவிட்டார். அது போல் உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்குமாறு தெரிவித்திருந்தார். அது போல் 10, பிளஸ் 2 தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்குகிறார்.
இதற்காக நேற்றைய தினம் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் சந்தித்தார். இதற்கு மாணவ, மாணவிகளின் தாய், தந்தையருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் உதவித்தொகை வழங்கினார் விஜய். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் மதிய உணவு தயாரானது. விஜய் எல்லாரும் சாப்பிட்டு விட்டார்களா என கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. மாணவர்களுக்கு பரிசுத் தொகை கொடுத்து பெற்றோர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த வகையில் முதலில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளித்தார். 600 க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினியை அழைத்து விஜய் கவுரவப்படுத்தினார்.
அவருக்கு வைர நெக்லஸை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் பொதுத் தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிய விஜய், அடுத்து ஒவ்வொரு மாணவராக அழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மாணவர்கள் கேட்ட படி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
காலை 11 மணிக்கு விஜய் பரிசளிக்க தொடங்கினார். இந்த நிகழ்வு விரைந்து முடியும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அங்கு மணிக்கணக்கில் ஆனது. விஜய்யை சந்திக்க வந்த மாணவர்கள் அவருக்காக கவிதை, பாட்டு எல்லாம் எழுதி வந்திருந்தனர். இவற்றை எல்லாம் அவர் கேட்டு மகிழ்ந்தார். மாலையில் நிகழ்ச்சி முடியும் என எதிர்பார்த்த நிலையில் இரவு 11.45 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது.
சுமார் 13 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் மேடையில் விஜய் நின்று கொண்டே இருந்தார். ஆனாலும் சிரித்த முகத்துடன் மாணவர்கள் கேட்டதை செய்தார். அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டார். ஒரு கட்டத்தில் கால் வலி தாங்க முடியாமல் அங்கிருந்த டேபிளில் சாய்ந்து கொண்டார். இரவு உணவையும் வந்தவர்களுக்கு தயார் செய்ய சொல்லி அதை அவரே பரிமாறினார்.
இது போன்று ஒரு நிகழ்ச்சி இதுவரை விஜய் நடத்தியதில்லை என்பதால் இந்த நிகழ்ச்சி விஜய்க்கும் அவருடைய இயக்கத்தினருக்கும் சவாலாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை சரியாக திட்டமிடாததால் மாணவர்களும் பெற்றோர்களும் இரவு வரை காத்திருக்க நேரிட்டதால் அதிருப்தி அடைந்த விஜய், நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications