எதுக்கு இந்த கேள்வி? பிடிஆர் சார் சொல்லிருப்பாரு.. இந்தி குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆன விஜய் சேதுபதி
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, தன்னிடம் செய்தியாளர் இந்தி பற்றி கேள்வி எழுப்பியதால் டென்ஷன் ஆனார். இந்த கேள்விக்கு பிடிஆர் ஒரு விளக்கம் கொடுத்திருப்பார் போய் பாருங்கள் என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்திலும் நடித்த விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படம் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு இந்தியில் சரளமாக பேசினார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், மெரி கிறிஸ்துமஸ் படக்குழு, சென்னை நுங்கம்பாக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் விஜய் சேதுபதி. அப்போது, சினிமாவிற்கு முன்பு துபாயில் சில காலம் வேலை பார்தேன். அப்போது இந்தி கற்றுக்கொண்டதன் பயன் தற்போது இந்தி படங்களில் நடிக்கும் போது வசனங்கள் பேச உதவுகிறது என்றார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர் இந்தி பற்றி கேள்வி எழுப்பினார். "75 வருடங்களாக நமது கலாச்சாரம், அரசியல் இந்திக்கு எதிரானது. இன்றைக்கும் 'இந்தி தெரியாது போடா' என்று பிரச்சாரம் செய்கிறோம். இந்தி படிக்க வேண்டுமா, வேண்டாமா" எனக் கேள்வி எழுப்பினார். உடனடியாக குறுக்கிட்ட விஜய் சேதுபதி, எதுக்கு இந்த கேள்வி, இந்தக் கேள்வியை என்னை மாதிரியான ஆட்களிடம் கேட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்தச் செய்தியாளர், தமிழ்நாட்டில், இந்தி படிக்க வேண்டாம் என திருப்பித் திருப்பிச் சொல்வார்கள் என்றார். அதற்கு நடிகர் விஜய் சேதுபதி, "இந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை, திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். வித்தியாசம் இருக்கிறது. இங்கு யாருமே இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
நீங்கள் கேட்கும் கேள்வியே தவறு இங்கு இந்தி படிப்பவர்கள் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனை யாரும் தடுக்கவில்லை. இதற்கு நம்ம பிடிஆர் சார் ஒரு இடத்தில் நன்றாக தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதை பாருங்கள்" எனப் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications