நடிகர் விஜய்யின் “மாஸ்டர் மைண்ட்”.. எல்லாம் ஜோதிடர் கையில்! ஜெயலலிதா, சசிகலாவுக்கு நம்பிக்கையானவராம்
சென்னை: ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன் போன்றோருக்கு ஜோசியம் பார்த்த ஜோதிடரின் பேச்சை கேட்டே நடிகர் விஜய் முடிவுகளை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன், "திண்டிவனத்தில் ஒரு பெரிய ஜோதிடர் இருக்கிறார். பலபேர் கிளம்பி அங்கு அமர்ந்து உள்ளார்கள். முக்கியமாக நடிகர் விஜய். அவர் சொல்படிதான் விஜய் நடப்பதாக கூறப்படுகிறது. அவர் குறித்துக்கொடுக்கும் தேதியைதான் விஜய் முடிவு செய்வதாக சொல்கிறார்கள்.

அவர் சாதாரண ஜோதிடர் இல்லையாம். சசிகலா, டிடிவி தினகரனுக்கும் ஜோதிடம் சொல்பவர். டிடிவி தினகரன் மகளுக்கு திருமணம் நடந்தது. அதற்கு ஜாதகம் பார்த்து முடிவு செய்து கொடுத்து உள்ளார். ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவர்களுக்கும் இவர் ஜோதிடம் பார்த்து இருக்கிறார்.
இருவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தியது புசி ஆனந்தாக இருக்கலாம். அல்லது தினகரன், சசிகலா மூலமாக இந்த தொடர்பு கிடைத்து இருக்கலாம். ஆனால், அவர் சொல்படியே விஜய் கேட்பதாக ஒரு தகவல் உள்ளது. அவருடைய எதிர்கால அரசியலுக்கு எல்லாம் இவர்தான் நேரம், நாள் எல்லாம் பார்த்துக் கொடுத்தார். அவர் பெயரை சொல்லலாம் என்று நினைத்தேன். பார்த்தால் மொத்த யூடியூப் சேனல்களும் திண்டிவனத்துக்கு படையெடுத்து விடுவார்கள்." என்றார்.
இதை கேட்ட மற்றொரு சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, "அப்படியென்றால் இந்த கல்வி உதவி வழங்கியதும் அவர் சொல்படிதானா. இப்படிதான் விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போதும் ஜோதிடர்களின் பேச்சை கேட்டுதான் ஒவ்வொன்றையும் செய்தார். பொதுவாகவே இந்த மனிதர்கள் அரசியலுக்கு வரும்போது மக்களை நம்புகிறார்களோ இல்லையோ ஜோதிடர்களை நம்புகிறார்கள்." என்றார்.
இந்த நிலையில் மறுநாள் எபிசோடில், பத்திரிகையாளர் பிஸ்மி, "விஜயின் ஜோதிடர் திண்டிவனம் என்று சொன்னீர்கள். கடைசியில் பார்த்தால் கடலூராமே? நீங்கள் சொன்னதை கேட்டு திண்டிவனத்தில் டிராபிக் ஜாம் ஏற்பட்டு விட்டதாம்." என்று கேட்க, அந்தணனோ, "நீங்கள் பெயரையே சொல்லக்கூடாது என்றீர்கள். ஊரை மட்டும் சொல்ல வேண்டுமா?" என்று கூறி இருக்கிறார்.
ஒரு பக்கம் சினிமாவில் விஜய் பிசியாக நடித்துக்கொண்டு இருக்க மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக அரசியலுக்கு அடித்தளம் அமைத்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே எழுந்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சுயேட்சைகளாக களமிறக்கினார்.
அவ்வப்போது மக்கள் இயக்கத்தின் மூலம் சில பணிகளை மேற்கொண்டு வந்த விஜய், தற்போது வேகமாக அரசியல் பணிகளை நகர்த்தி வருவதை அவரது அண்மை கால செயல்பாடுகள் காட்டுகின்றன. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், தீரன் சின்னமலை, காயிதே மில்லத், சிவந்தி ஆதித்தனார், பாரதிதாசன் போன்றோரின் பிறந்தநாளன்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் நேரில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர் போன்றோரின் வரலாற்றை படிக்கும்படி மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications