ராஜாஜியின் குலக்கல்வியால் பாதிக்கப்பட்டேன்.. 8ம் வகுப்போடு படிப்பு நின்றுபோனது.. நடிகர் விஜயகுமார்!
சென்னை: ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட குலக்கல்வி திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவன் நான் என்று நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். அதனால் 8வது வரை மட்டுமே படிக்க முடிந்தது என்று கூறியுள்ள விஜயகுமார், அதன்பின் படிப்பை தொடர முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என்பதில் தமிழக அரசு தெளிவுடன் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை இன்னொரு குலக்கல்வி திட்டம் என்று திமுகவினர் சாடி வருகின்றனர். மத்திய அரசு நிதியை நிறுத்திய போதும், தமிழக அரசு இதுவரை ஏற்கவில்லை.

விஜயகுமார் பேச்சு
இந்த நிலையில் திமுக தரப்பில் நடந்த கல்வி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயகுமார் குலக்கல்வி திட்டம் தொடர்பாக பேசி இருப்பது பலரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறது. அதில் விஜயகுமார், நான் படிக்கும் காலத்தில் ராஜாஜி முதலமைச்சராக இருந்தார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்தேன். குலக்கல்வி என்றொரு திட்டம் கொண்டு வரப்படுகிறது.
குலக்கல்வி திட்டம்
அதாவது பாதி நேரம் படிப்பு, பாதி நேரம் தொழில் என்பதே குலக்கல்வி திட்டம். அதன் காரணமாக விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் பாதிக்கப்பட்டேன். ஏனென்றால் விவசாயத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அந்த குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்ததன் காரணமாக 8ஆம் வகுப்புடன் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இப்போது மாணவர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
காலை உணவு திட்டம்
சத்துணவு திட்டம் மட்டுமல்லாமல், காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயர்கல்விக்காக அமைச்சர் கோவி.செழியன் இன்னும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 1953ஆம் ஆண்டு ராஜாஜி முதல்வராக இருந்த போது கல்வி முறையில் சில மாற்றங்களை செய்ய முயன்றார்.
ராஜாஜியின் கல்வி திட்டம்
அந்த திட்டம் என்னவென்றால், ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டுமே மாணவர்கள் கல்வி கற்க முடியும். மீதமுள்ள நேரத்தில் தங்களது பெற்றோருக்கு உதவியாக தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதனை திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தன. இந்த முறை சாதிய அமைப்பை பலப்படுத்தும் குலக்கல்வி திட்டம் என்று கடுமையாக சாடினர். பின்னர் இந்த திட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications