விஷால் இப்ப ஓகே.. கூவாகத்தில் தேவதைகளாக மின்னிய அழகிகள்! மிஸ் திருநங்கையாக தூத்துக்குடி சக்தி தேர்வு
சென்னை: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள், சித்திரை திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.. விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் மிஸ் திருநங்கையாக தூத்துக்குடியை சேர்ந்த சக்தி தேர்வு செய்யப்பட்டார். இன்றைய தினம், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற உள்ளதால், ஏராளமான திருநங்கைகள் கூவாகம் கிராமத்தில் குவிந்துள்ளனர்.
உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ளது கூவாகம் கிராமம்.. இது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது.. இங்குள்ள கூத்தாண்டவர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடுவது வழக்கமாகும்.

உற்சாக கொண்டாட்டம்
அந்தவகையில், இந்த வருடத்துக்கான திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடந்தது.. இதில், ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்தில் திரண்டனர்.. அத்துடன், திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் என ஒவ்வொரு நிகழ்வும் நடைபெற்றன.
நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில், முன்னிஜி தலைமையில் நடைபெற்றது.. இவ்விழாவுக்கு பொன்முடி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில், சினிமா நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டார்.
திருநங்கைகள் ஆட்டம், பாட்டு
இந்த திருவிழாவில் பாட்டு, டான்ஸ் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான திருங்கைகள் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்திவிட்டார்கள்.. அதிலும், பரதநாட்டியம், கிராமிய நடனம் மட்டுமல்லாமல், சினிமா பாடல்களுக்கும் நடனமாடியதை கண்டு, அனைவருமே கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இதற்கு பிறகு மிஸ் திருநங்கை அழகி போட்டி நடந்தது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு, விதவிதமான உடைகளை அணிந்து வந்தனர்.. மேடையில் அவர்கள் நடந்து வரும் அழகை, பார்வையாளர்கள் வியந்து பார்த்தனர்..
முதல் பரிசு தூத்துக்குடி
இறுதியில் இந்த ஆண்டிற்கான மிஸ் திருநங்கையாக தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். ஜோதாவிற்கு 2வது இடமும், திபாஷா 3வது இடமும் பிடித்தனர்.. இவர்கள் இருவருமே சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.. மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்ட இந்த 3 பேருக்குமே கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இன்றைய தினம், கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.. நாளை மறுநாள் கூத்தாண்டவர் தேரோட்டமும், திருநங்கைகள் கைப்பெண் கோலம் ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.
விஷால் மயக்கம்
முன்னதாக, நேற்றைய தினம் நடந்த மிஸ் திருநங்கை அழகு போட்டியில் திரைப்பட நடிகர் விஷால் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசி முடித்ததுமே, கிளம்பி செல்ல தயாரானார்.
அப்போது திடீரென மேடையிலேயே நடிகர் விஷால் மயங்கி கீழே சரிந்து விழுந்தார்.. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் மயங்கிய நிலையில், டாக்டர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு மேடையிலேயே முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த விஷால் காரில் ஏறி, விழுப்புரத்தில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications