தலைகீழ் மாற்றம்..துறவறம் பூண்ட நடிகை புவனேஸ்வரி! தினமும் 50 பேருக்கு அன்னதானம்! அவரே சொன்ன விளக்கம்
சென்னை: தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் சிக்கி பின்பு விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு துறவறம் பூண்டுள்ள அவர் தினமும் 300 ஏழை மக்களுக்கு அன்னதானம் அளித்து வருகிறார். ஆன்மீகத்தின் பக்கம் செல்ல என்ன காரணம் என்பது குறித்து அவரே விளக்கமும் அளித்திருக்கிறார்.
தமிழ் திரையலகம் எத்தனையோ நடிகர் நடிகைகளை பார்த்திருக்கிறது. உச்ச நட்சத்திரங்கள், குணச்சித்திர நடிகர்கள்,பட்டியலில் கவர்ச்சி நடிகைகளுக்கும் தமிழ் திரை உலகில் பஞ்சமில்லை. ஒரு சில சீன்களில் கவர்ச்சி காட்டி விட்டு ஒரு பாடலுக்கு நடனமாடி விட்டு செல்லும் நடிகைகள் காலப்போக்கில் காணாமல் போய்விடுவார்கள்.

அப்படி ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் புவனேஸ்வரி. பூனைக்கண் புவனேஸ்வரி என அவரை அடைமொழி இட்டு அழைப்பார்கள். பாய்ஸ் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், தொடர்ந்து தலைநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகங்களிலும் சில படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த போது அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் பேரிடர் ஏற்பட்டது. விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அப்போதைக்கு அதுதான் தமிழ் செய்தி தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் தலைப்பு செய்தியாக மாறியது.
தொடர்ந்து சட்ட போராட்டத்திற்கு பின்பு அந்த வழக்கில் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். அதற்குப் பிறகு சில படங்களில் நடித்த அவர் திடீரென சினிமாவுக்கு விடை கொடுத்தார். இந்த நிலையில் தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ள அவர் துறவறம் பூண்டுள்ளதாகவும், கோயில்களில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வருவது என தனது பாதையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவரே கூறும் போது," நெல்லை தான் எனது சொந்த ஊர். குடும்ப சூழலில் நடிக்க வந்த போது ஆரம்பத்தில் எனக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்கள் கிடைத்தது. தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால் அதிலேயே என் சினிமா பயணம் தொடர்ந்தது. திடீரென கால சூழல் காரணமாக விபச்சார வழக்கில் சிக்கினேன். நான் கைது செய்யப்பட்டதை தலைப்புச் செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் அந்த வழக்கில் நான் நிரபராதி என போராடி நிரூபித்த பிறகு அதனை பெட்டி செய்தியாக வெளியிட்டார்கள்.
அதற்குப் பிறகும் இந்த சமூகம் என்னை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக என் மனதில் மாற்றம் எழுந்து நிலையில் ஆன்மீகத்தின் பக்கம் எனது பாதை மாறி உள்ளது. எனது வாழ்க்கையின் மீதி காலத்தை இறை பணிக்கு அர்ப்பணிக்க உள்ளேன். எனது உடலையும் மனதையும் இறைவனுக்கு கொடுத்து விட்டேன். முழு மனதுடன் துறவறம் ஏற்றுக் கொள்கிறேன். காசிக்கு சென்று சித்தி பெற்று உள்ளேன்.
நான் போகாத கோவில்களே கிடையாது. தேவாலயங்கள் பள்ளிவாசல்களுக்கும் சென்று வருகிறேன். ஆன்மீகப் பணிக்கு மதம் தடை கிடையாது. சிறுவயதில் பசி காரணமாக நான் பல நாட்கள் பட்டினி கிடந்து இருக்கிறேன். அந்த நிலை மற்றவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தினமும் 300 பேருக்கு உணவு அளித்து வருகிறேன். சென்னையில் எனக்கு சொந்தமான வீடுகளை படப்பிடிப்புக்காக வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் அன்னதானத்திற்கு செலவிட்டு வருகிறேன்.
பொங்கல், தீபாவளிக்கு பத்தாயிரம் பேருக்கு உணவு, உடை வழங்கினேன். நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. உதவி செய்கிறேன் என்பவர்கள் மனது சரி இல்லை” எனக் கூறியிருக்கிறார். ஏற்கனவே பல நடிகைகள் துறவறம் பூண்ட நிலையில் அந்த பட்டியலில் தற்போது புவனேஸ்வரியும் இணைந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications