“பாரி வள்ளல்னு சொல்வாங்களே.. அது இவர்தான்”.. விஜயகாந்த் உடலை பார்த்து கதறிய நடிகை நளினி.. உருக்கம்
சென்னை: தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று காலமானார். இந்நிலையில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நடிகை நளினி அஞ்சலி செலுத்திய பின்னர் கூறுகையில், “பாரி வள்ளல்னு சொல்லுவாங்களே! அது இவர்தான்” என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
தமிழ் திரையுலகம் ஏராளமான அரசியல் தலைவர்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜயகாந்த் தனிச்சிறப்பு மிக்கவர். திரைப்படங்களில் பேசும் வசனங்களை அவர் மக்கள் மத்தியிலும் பேசியதே இந்த சிறப்புக்கு காரணம். இது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்படித்தான் அவர் தேமுதிக எனும் கட்சியை உருவாக்கினார். கட்சியை தொடங்கிய ஒரே ஆண்டில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலும் நுழைந்தார் அவர்.

சிறந்த எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். இவருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட மோதல் போக்கு, அதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சரிவு, திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 2016ல் மக்கள் நல கூட்டணியில் நின்று தேர்தலில் தோல்வியுள்ளது என அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒரு கட்டத்தில் அவர் முற்றிலுமாக வெளியேறினார். அரசியல் தோல்வி ஒருபுறம் எனில், உடலும் ஒத்துழைக்காமல் இழுக்கடித்தது.
வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று பார்த்தார். பெரிய அளவில் பலன் இல்லை. அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார். வாய்ப்பிருக்கும்போது அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வருந்தார். இப்படி இருக்கையில் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல் நலம் குறித்து சலசலப்பு எழுந்தது.
ஆனால் அதையெல்லாம் முறியடித்து மீண்டு வந்தது, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களுக்கு உற்சாகமளித்தார். இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று சொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து நெகட்டிவ்வான அறிக்கை வெளியானது.
அதாவது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அதிலிருந்து அவரை மீட்க மருத்துவர்கள் போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துவிட்டதாக அறிக்கை வெளியானது. இதைகேட்டு தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் கதறி அழுதனர். விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினி, கமல் என திரையுலகின் பெரும் நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அஞ்சலி செலுத்திய பின்னர் கண்ணீர் மல்க பேட்டியளித்த நடிகை நளினி, “பாரி வள்ளல்னு சொல்லுவாங்களே! அது இவர்தான்” என உருக்கமாக கூறியுள்ளார். “இன்று பத்திரிகையாளர்கள் இவ்வளவு நேரம் கால் வலிக்க நின்றுக்கொண்டிருக்கீர்களே, இதையெல்லாம் அவர் பார்த்திருந்தால் உங்களை இப்படி விட்டிருக்க மாட்டார். உங்கள் ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டு நலம் விசாரிப்பார். நீங்கள் எந்த இடையூரிலும் இல்லாமல் இருப்பதை அவர் உறுதி செய்வார். அதேபோல நீங்கள் சாப்பிட்டீர்களா என்பதைதான் முதலில் விசாரிப்பார்.
அப்பேர்பட்ட தூண் நம்மைவிட்டு கடவுளிடம் என்றுவிட்டார் என்று நினைக்கும் போது மனம் வருந்துகிறது. எல்லோரும் பாரி வள்ளல் குறித்து சொல்வார்கள். ஆனால் அவரை நாம் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இங்கு படுத்திருக்கிறாரே எனது அண்ணன், அவர் எவ்வளவோ உதவி செய்திருக்கிறார். நான் இருக்கேன் உனக்கு என்று தைரியம் கொடுத்திருக்கிறார். இன்று அவர் இல்லை என்று நினைக்கும்போது மனம் வெடிக்கிறது” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications