நடிகை ரோகிணி நறுக்.. "இப்படி பண்ணி வெச்சிருக்காங்க.. அதுவே வெட்கக்கேடு, இது அதுக்கு மேல வெட்கக்கேடு"
சென்னை: மணிப்பூர் சம்பவ அதிர்ச்சியில் இருந்து இன்னமும் இந்த நாட்டு மக்கள் மீளவில்லை.. மீளவும் முடியவில்லை.. தொடர்ந்து அடுத்தடுத்த அதிர்ச்சிகள் அம்மாநிலத்தில் நடந்து வரும்நிலையில், பாஜக அரசுக்கு எதிரான கண்டனமும், அதிருப்தியும் வெடித்து கிளம்பி உள்ளது.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே போராட்டங்கள் தீவிரமாகி உள்ளது.. குறிப்பாக, மைத்தேயி - மெய்டெய் மக்கள் நடத்திய பேரணியானது, மோதலாக வெடித்து, 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு சொல்கிறது.

சர்ச்கள்: எத்தனையோ பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்... 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.. 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 350 சர்ச்களும், 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.. ஆனாலும், மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, ஒட்டுமொத்த கொடூரத்தின் உச்சமாக பார்க்கப்பட்டு வருகிறது .. இது பிற மாநில மக்களையும் கொதிப்பில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு நடுவில், பிஷ்னுபூர் மாவட்டத்தில் குக்கி சமூகத்தை சேர்ந்த டேவிட் என்ற இளைஞனின் தலை துண்டிக்கப்பட்டு, அவரது வீட்டு வாசலிலேயே சொருகிவைத்து போயுள்ளார்கள்..
நடிகை ரோகிணி: இப்படிப்பட்ட சூழலில், நாட்டு மக்களின் கோபம் அம்மாநில அரசு மீது திரும்பி உள்ளது. மத்திய அரசுக்கு எதிரான கண்டனங்களை, அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் கொட்டி தீர்த்து வருகிறார்கள். அந்தவகையில், பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான ரோகிணியும் பாஜக மீதான தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தந்துள்ள பேட்டியில் சொல்லி உள்ளதாவது:
"ஒட்டுமொத்த நாடும் வெட்கப்படவேண்டிய விஷயத்தை பண்ணி வெச்சிருக்காங்க.. ஒரு பெண்ணின் உடலை, இப்படி நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டுபோய், வன்புணர்வு செய்திருப்பது நமக்கு எல்லாருக்குமே வெட்கக்கேடு.. அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதுக்கும் மேல வெட்கக்கேடு. 77 நாட்களுக்கு பிறகுதான், பிரதமர் இதை பற்றி வாய் திறக்கிறார் என்பது, எப்படிப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்பதை யோசித்து பார்க்கணும்
நம்ம சமூகத்துல பெண்ணின் உடல் மேல குடும்ப கௌரவத்தையும் சமூக மரியாதையையும் புகுத்தி வைத்துள்ளதால்தான் இப்படி பண்ணத் தோணுது. அவமான சின்னங்களாக பெண்களின் உடலை உருவாக்கி வைத்திருப்பது நம்ம சமூகம்தான். இதுபோன்ற பார்வை எப்போது கலைகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு விடுதலை.
பிரதமர் பதில் என்ன: அதற்கு முன்னாடி, இதுபோன்ற குற்றங்கள் நடக்கும்போது உடனடியாக போய் நிற்க வேண்டிய போலீஸே வேடிக்கை பார்த்திருக்காங்க" என்று அந்த பெண் சொல்லியிருக்கு. இது எந்த அளவுக்கு நியாயம் என்பதை பிரதமர் சொல்ல வேண்டியிருக்கு. அந்த மாநிலத்தின் முதல்வர் பதில் சொல்ல வேண்டியிருக்கு" என்று கூறியிருக்கிறார் ரோகிணி.












Click it and Unblock the Notifications