உயிர் உள்ளவரை... நடிகர் விஜய் கட்சியில் இணைவது தொடர்பாக நடிகை ரோஜாவின் ‘சென்டிமென்ட்’ விளக்கம்!
சென்னை: நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக வெளியான தகவல்களை ஆந்திரா முன்னாள் அமைச்சரான நடிகை ரோஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமது சக நடிகரான சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோதே அந்த கட்சியில் சேராத நான் நடிகர் விஜய் கட்சியில் எப்படி இணைவேன்? என்றும் நடிகை ரோஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியதாக அறிவித்தது முதலே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. லோக்சபா தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டியிடவில்லை. ஆனால் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் விஜய் கட்சி தீவிரமாக உள்ளது.

இதன் முதல் கட்டமாக செப்டம்பர் 23-ந் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம் என பல நகரங்களில் மாநாடு நடத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் தற்போது விக்கிரவாண்டியை தேர்வு செய்து போலீசார் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் முதலாவது மாநாட்டில் சீனியர் அரசியல் தலைவர்கள் சிலர் இணையப் போவதாக செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் பட்டியலில் நடிகை ரோஜாவின் பெயரும் அடிபடுகிறது. ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் நடிகை ரோஜா. ஆந்திரா சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு நடிகை ரோஜா தோல்வியைச் சந்தித்தார். இந்த பின்னணியில் நடிகர் விஜய் கட்சியில் நடிகை ரோஜா இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் நடிகர் விஜய் கட்சியில் இணையப் போவதாக வெளியான செய்திகளை நடிகை ரோஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் எனது சக நடிகரான சிரஞ்சீவி கட்சி தொடங்கிய போதே அந்த கட்சியில் சேரவில்லை. தற்போது விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார் என்பதற்காக நான் எப்படி அதில் சேருவேன்? என்னுடைய உயிர் உள்ளவரை ஜெகன் மோகன் ரெட்டிக்காகவே பணியாற்றுவேன். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில்தான் தொடர்ந்து பயணிப்பேன் என தெரிவித்துள்ளார் நடிகை ரோஜா.












Click it and Unblock the Notifications