"க்ளுக்"கென சிரித்த பிரியா.. "கெத்தா கார்ல மேயர் வரும்போது".. பூரித்த நடிகை சங்கீதா.. கவனித்த பிரபலம்
சென்னையில் நடந்த முதல்வர் பிறந்தநாள் விழாவில் மேயர் பிரியா குறித்து பெருமிதம் தெரிவித்தார் நடிகை சங்கீதா
சென்னை: சென்னையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில், பிரபல நடிகை சங்கீதா கலந்து கொண்டு பேசினார்.. அப்போது மெகா கோரிக்கை ஒன்றை பெண்களுக்கு அவர் விடுத்துள்ளது, பலரையும் உற்றுநோக்க வைத்துவருகிறது.. சங்கீதாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
10 வருடம் கழித்து, திமுக ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து, சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி, பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக பிரியா ராஜன் தேர்வானார்.
சுமார் 340 வருடங்கள் பழமையான சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் போட்டியின்றியும் அப்போது தேர்வு செய்யப்பட்டார்..

வடசென்னை சபாஷ்
இதன் மூலம் சென்னையின் மிக இளம் வயது மேயர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் பிரியா. இதற்கு முன்னதாக சென்னை மேயர் பதவி என்பது முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வகித்த பதவி ஆகும்... அதுமட்டுமல்ல, இதுவரையில் தென் சென்னையை சேர்ந்தவர்களே மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், முதன் முறையாக வடசென்னையைச் சேர்ந்த இளம் பெண் வேட்பாளர் மேயர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.. மேயராக பொறுப்பேற்றது முதலே பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் சென்னை மேயர்..

பிரபல நடிகை
எதிர்க்கட்சிகள் எழுப்பும் தன்மீதான விமர்சனங்களை எல்லாம் தகர்த்தெறிந்தும், எதிர்மறையான கருத்துக்களை தன்னுடைய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் எதிர்கொண்டும், களப்பணியாற்றி வருகிறார். இந்நிலையில்தான், சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா, பிரபல நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. அப்போது சங்கீதா பேசும்போது, மேயர் பிரியாவின் செயல்பாடுகளை மனமார பாராட்டினார்.. அத்துடன் ஒட்டுமொத்த பெண்களுக்கும், ஒரு முக்கிய கோரிக்கை ஒன்றையும் நடிகை சங்கீதா விடுத்திருக்கிறார்.

நடிகை சங்கீதா
விழாவில் சங்கீதா பேசியபோது, "கேமரா முன்னாடி நடிக்க சொன்னால், தைரியம் எனக்கு தாராளமாக வந்துவிடும்.. எதுக்குமே பயப்பட மாட்டேன்.. என்னை சினிமா துறையில் ரொம்ப தைரியசாலி என்று சொல்வார்கள்.. ஆனால், அரசியல் மேடையில், அதுவும் பெரிய பெரிய தலைவர்கள், தொண்டர்கள் முன்பு பேசணும்னு நினைச்சாலே, குரல் எல்லாம் உதறுது.. கை எல்லாம் உதறுது.. காலையிலேயே இப்படியேத்தான் உதறிட்டு இருக்கு.. நாம என்ன பேசபோறோம், நமக்கு என்ன தெரியும் என்று யோசித்து கொண்டே இருந்தேன்.. போன முறை வந்தபோதும் இப்படியேதான் புலம்பினேன்.. இந்த முறையும் அதையேதான் சொல்றேன்..

அண்ணே அண்ணே
அரசியல் என்ற வார்த்தையே ரொம்ப புனிதமானது.. நமக்காக இல்லாமல், பிறருக்காக செய்ய வேண்டும் என்று நினைத்து செய்யும் குணம், கடவுளுக்கு சமம் என்று சொல்வேன்.. அர்ப்பணிப்பு நிறைந்தது அரசியல்.. அந்த பணிகளை இவர்கள் எல்லாம் காலம் காலமாக செய்து வருவதே எனக்கு மிகப்பெரிய மரியாதையை இவர்கள் மீது ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக அரசியல் என்றாலே எனக்கு பயம், ஒருவித கூச்சம் இருக்கும்.. ஆனால், அண்ணன் சேகர்பாபு அழைத்தால் மட்டும் தவறாமல் விழாவுக்கு வந்துவிடுவேன்.. ஓகே அண்ணே, வந்துடறேன் என்று சொல்லிவிடுவேன்.. அண்ணன் விழாவுக்கு கூப்பிடும்போது மட்டும் எங்கிருந்து அந்த தைரியம் எனக்கு வருகிறது என்றே தெரியல..

ரொம்ப சந்தோஷம்
திமுக ஆட்சியில் பெண்களுக்கு நிறைய முக்கியத்துவம் தருகிறார்கள்.. இதனால் ஒரு பெண்ணாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.. கவுன்சிலர்களில் 50 சதவீத்துக்கு மேல் பெண்கள் பதவிகளை அலங்கரித்து வருவது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை தருகிறது.. நம்முடைய மேயர் ஒரு பெண்.. பிரியா மேடம் பார்த்தீங்கன்னா, அது நமக்கு மற்றொரு பெருமை.. அவர் காரில் இருந்து கெத்தாக இறங்கி வருவதை பார்க்கும்போது, ஒரு பெண்ணாக எனக்கு ரொம்ப சந்தோஷம்... நிறைய பெண்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.. அதனால் என்னுடைய ஒரு சிறிய வேண்டுகோளை உங்களிடம் சொல்கிறேன்..

கார்ல பிரியா
பெண்களாகிய நமக்கு மிகப்பெரிய பொறுப்பு ஒன்று இருக்கிறது.. பிள்ளைகளை பெற்று வளர்க்கக்கூடியவர்களே நாம்தான்.. அப்படி இருக்கும்போது பெண் குழந்தைகளை தைரியமாக நீங்கள் வளர்க்க வேண்டும்.. பெண் குழந்தைகளுக்கு நிறைய தைரியம் கொடுங்கள்.. அதேமாதிரி ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களை மதிக்க கற்று கொடுங்கள்.. பெண் பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என்பதை ஆண்பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள்.. இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்.. என் குழந்தைக்கும் நான் கற்று தரும் விஷயம் தைரியமாக இருக்க வேண்டும் என்பதைதான்..

ஐயா ஸ்டாலின்
எங்கே போனாலும், தைரியமாக பேசணும், மரியாதையாக நடந்து கொள்ளணும்.. இதெல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.. இந்த மாதமே, பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய மாதம்தான்.. அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்களை இப்போதே நான் தெரிவித்து கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இது கொஞ்சம் லேட்தான்,.. இருந்தாலும், என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்றார் சங்கீதா.. இந்த வீடியோவை திமுகவினர் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஈர்த்த வார்த்தை
கடந்த வருடம் ஜனவரியில், பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய உத்தரவின்படி, 16 வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும் 16 வார்டுகள் எஸ்.சி இரு பாலருக்கும் 84 வார்டுகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டன.. சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், நடக்க போகும் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்படும் மேயர்களே இந்த மாநகராட்சிகளின் முதல் பெண் மேயர்களாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிகளை எஸ்.சி. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதும் முக்கியமானதாக அப்போது பார்க்கப்பட்டது.

ஹேப்பி சங்கீதா
குறிப்பாக, சென்னை மாநகராட்சி மேயர் பதவி எஸ்.சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை, தலித் செயல்பாட்டாளர்களும் தலித் அரசியல் கட்சியினரும் மனமார வரவேற்று, தமிழக அரசுக்கு பாராட்டும் தெரிவித்திருந்தனர்.. அத்துடன் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் அதாவது 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்தன.. இதுகுறித்து அப்போதே விசிக தலைவர் திருமாவளவனும், "அதிகார வலிமையின் மூலம் விளிம்புநிலை மக்களை மேம்படுத்தும் சமூகநீதி அரசு"என்று பெருமிதம் தெரிவித்திருந்த நிலையில், இதைத்தான் தற்போது, மகளிர் தினத்தை முன்னிட்டு, நினைவுகூர்ந்து நடிகை சங்கீதா பேசியுள்ளது அனைவரையும் கவர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications