“ஆணவக்கொலையை நியாயப்படுத்துகிறார்”.. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மீது நடிகை ஷகிலா பரபர புகார்!
சென்னை: ரீல்ஸ் பிரபலம் "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் மீது நடிகை ஷகிலா போலீசில் புகார் அளித்துள்ளார். கவின் ஆணவக்கொலையை நியாயப்படுத்தி பேசிய திவாகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
வாட்டர் மெலன் ஸ்டார், சின்ன சிவாஜி என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் திவாகர், ரீல்ஸ் மூலம் பிரபலமானவர். நடிகர் சூர்யா கஜினி திரைப்படத்தில் தர்பூசணி சாப்பிட்டுக்கொண்டு ஸ்டைலாக நடித்த காட்சியை திவாகர் ரீ கிரியேட் செய்தார். அதன் மூலம் பிரபலமடைந்தவர் தன்னை தானே "வாட்டர் மெலன் ஸ்டார்" என அழைத்து வருகிறார்.

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்
இவர் விளம்பரத்திற்காக செய்யும் சேட்டைகள் ஏராளம். சினிமா நடிகர்களை வம்புக்கு இழுக்கும் திவாகர், யூடியூபில் தனது நடிப்பை பார்த்து தான் அவர்கள் நடிக்கிறார்கள் என்றும் எல்லை மீறிப் பேசி வருகிறார். இந்த நிலையில் தனது பேச்சால் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சாதி தொடர்பான அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகை ஷகிலா 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகாரில், கடந்த சில தினங்களாக Watermelon star என்று சொல்லிக் கொண்டு youtube சேனலில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் டாக்டர் திவாகர் என்பவர் சாதிய எண்ணத்தோடு பேசி உள்ளார்.
ஷகிலா புகார்
கடந்த 27.07.2025 அன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன கவின் என்பவரை திருநெல்வேலி மாவட்டத்தில் வைத்து சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். பல போராட்டங்களுக்குப் பிறகு அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்த படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் டாக்டர் திவாகர் youtube சேனலில் பேட்டியளிக்கும் போது சுர்ஜித் என்பவர் என்னுடைய முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று வெளிப்படையாக தன்னுடைய சமூகத்தை சொல்லி இந்த ஆணவப் படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளிக்கும் போது ஜி.பி முத்து என்பவரை பற்றி நெறியாளர் கேள்வி கேட்கும் போது டாக்டர் திவாகர் என்பவர் ஜி. பி முத்து என்பவரது சமூகத்தை குறிப்பிட்டு அவர் Low caste என்று சொல்லி அவரைப் பற்றி பேசி தன்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்
தொடர்ந்து இதுபோன்று வெளிப்படையாக திவாகர் பொதுவெளியில் தான் சார்ந்த சமூகத்தை உயர்ந்த சாதியாகவும் மற்ற சமூகங்களை கீழ் சாதியாகவும் பேசி வரும் இந்த திவாகர் என்பவரை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் சமூக நல்லிணத்தை கெடுக்கும் வகையில் பேட்டி அளித்து வரும் டாக்டர் திவாகர் என்பவரது மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என ஷகிலா அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
போலீசில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, "சாதி பெருமை பேசுகிறார் திவாகர். அது தவறு. காதல் எல்லாம் சாதி பார்த்து வர்ற விஷயமா? திவாகரை கைது செய்யக்கோரி புகார் அளிக்க யாராவது ஒருத்தர் முன்வரணும். நான் வந்திருக்கிறேன். நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications