பொய் சொல்லாதீங்க ! பண்ணை வீட்டில் என்ன ஆனது?.. பயில்வான் ரங்கநாதனுக்கு விஜயலட்சுமி வக்கீல் வார்னிங்!
சென்னை: சீமானிடம் நடிகை விஜயலட்சுமி ரூ 10 கோடி பணம் வாங்கிக் கொண்டுதான் சென்றார் என பயில்வான் ரங்கநாதன் மீது அவதூறு வழக்கு தொடருவேன் என வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துக் கொண்டு குடும்பம் நடத்திவிட்டு தன்னுடன் வாழ மறுத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக புகார் கூறி வருகிறார் நடிகை விஜயலட்சுமி.

இந்த நிலையில் சீமானை சிறையில் அடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தார் விஜயலட்சுமி. அவர் சென்னை கமிஷர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த இரு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் இன்று ஆஜராவார் என அவருடைய வழக்கறிஞர் சங்கர் தெரிவித்திருந்தார். ஆனால் இதனிடையே இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக திடீரென கடந்த 15 ஆம் தேதி விஜயலட்சுமி நள்ளிரவு சீமான் மீதான கேஸை வாபஸ் பெற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் சீமான் மிகப்பெரிய சக்தியாக தமிழகத்தில் இருக்கிறார். அவரை ஒன்றும் செய்ய முடியாது என தெரிந்துவிட்டது, அவர் எனக்கு எதிரி அல்ல, என்னுடன் வாழ்ந்தார், அவர் நன்றாக இருக்கட்டும் என உருக்கமாக தெரிவித்திருந்தார். மேலும் தான் சீமானிடம் காசு வாங்கவில்லை என்பதை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் சென்னைக்கு இனி வரவே மாட்டேன் என கூறிவிட்டு பெங்களூருக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி ரூ 10 கோடி பணத்தை சீமானிடம் வாங்கிக் கொண்டுதான் கேஸை வாபஸ் பெற்றார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து விஜயலட்சுமியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: கடந்த 15 ஆம் தேதி அன்று சீமான் மீது கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுவிட்டார். அவர் கொடுத்த புகாருக்கு பிறகு மன உளைச்சலும் பிரச்சினைகளும் அதிகமாகிவிட்டன. அவருடன் இருந்த வீரலட்சுமி நான் உதவுகிறேன் என சொல்லி விஜயலட்சுமியை அழைத்து வந்து அவர் பிரபலமாகும் முயற்சியிலும் பணம் சம்பாதிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.
விஜயலட்சுமியின் உள்ளுணர்வை கூட மதிக்காமல் அவரை பகடைக்காயாக பயன்படுத்தினார். விஜயலட்சுமிக்கு உணவு கூட வீரலட்சுமி வாங்கித் தரவில்லை. அவருக்கு தமிழக போலீஸ்தான் வாங்கிக் கொடுத்தார்கள். இப்படியே போனால் நம்மை ஏதாவது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில்தான் புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.
கூட இருந்தவர்களே இப்படி பாதகம் செய்யும் போது அவர் என்ன செய்வார், அதனால்தான வாபஸ் பெற்றார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு திருக்கழுக்குன்றத்திற்கு அருகே ஒரு பண்ணை வீட்டில் விஜயலட்சுமி இருந்தார். அவர் புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டு பெங்களூர் சென்றுவிட்டார், ஆனால் அவர் சீமானிடம் ரூ 10 கோடி செட்டில்மென்ட் வாங்கியதாக பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
ஒரு ரூபாய் பணம் கூட யாரிடமும் விஜயலட்சுமி வாங்கவில்லை. வீரலட்சுமியால் நரகத்திற்கு மேலான கொடுமையை விஜயலட்சுமி அனுபவித்துவிட்டார். சீமானிடம் விஜயலட்சுமி பணம் வாங்கிக் கொண்டு சென்றார் என யாரும் சொல்லாதீர்கள், அப்படி யாராவது அவதூறு பரப்பினால் நிச்சயமாக அவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடர்வேன். இவ்வாறு நடிகை விஜயலட்சுமியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications