மத்திய அரசு மீது பழி! யாரை ஏமாற்றுகிறார் அமைச்சர் நேரு! ஆர்ப்பாட்டத்தில் நடிகை விந்தியா ஆவேசம்!
சென்னை: சொத்துவரியை உயர்த்திவிட்டு மத்திய அரசு மீது அமைச்சர் கே.என்.நேரு பழி சுமத்துவதை யாரும் நம்பமாட்டார்கள் என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
யாரை ஏமாற்ற அமைச்சர் கே.என்.நேரு இவ்வாறு பேசுகிறார் என அவர் கேள்வி எழுப்பினார்.
சொத்துவரி உயர்வைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறினார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா, தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையுமே திமுக அரசு நிறைவேற்றவில்லை என எடுத்ததுமே ஒரே போடாக போட்டார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு எப்போது 150% சொத்து வரியை உயர்த்துங்கள் என தமிழக அரசிடம் கூறியது என வினவினார்.

ஒரு வருடம்
திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் முழுமையாக ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் இப்படி ஒரு சுமையை மக்களுக்கு கொடுத்திருப்பதாகவும் மகளிருக்கு ரூ.1000 கொடுக்காதது ஏன் எனவும் சமையல் எரிவாயு சிலின்டருக்கு ரூ.100 குறைக்காதது ஏன் எனவும் வினவினார். மக்களுக்கு எதையுமே செய்யாததால் மக்களை திமுகவினரால் சந்திக்க முடியவில்லை எனவும் மக்களோடு மக்களாக பயணிக்காமல் துபாய்க்கு முதல்வர் தனி விமானத்தில் சென்றது ஏன் எனவும் வினவினார்.

சொத்து வரி
தமிழகத்தில் 150% வரை சொத்துவரியை உயர்த்திவிட்டு மத்திய அரசு மீது அமைச்சர் கே.என்.நேரு பழியை சுமத்துகிறார் என்றும் இதனை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். மத்திய அரசு 150% வரை சொத்து வரியை உயர்த்துமாறு எப்போது கூறியது என்பதை அவர் விளக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களுக்கு நிம்மதியில்லை
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்கள் இப்போது தான் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில், சொத்து வரி உயர்வை விதித்து அவர்களின் நிம்மதியை திமுக அரசு பறித்துள்ளதாக நடிகை விந்தியா குற்றஞ்சாட்டினார்.












Click it and Unblock the Notifications