அதானி பவர் விவகாரம்.. நெருப்பில்லாமல் புகையாது.. திமுகவை பொளந்துகட்டிய பிரேமலதா
சென்னை: சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி மற்றும் ஏழு பேர் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் பெயரும் அடிபட்டு வருகிறது. அதானி மின்வாரியம் தொடர்பான எவ்வித ஒப்பந்தமும் அதானி குழுமத்துடன் செய்யப்படவில்லை என்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 2,100 கோடி ரூபாயை இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளைப் பெற்றதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கௌதம் அதானி மற்றும் ஏழு பேர் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா உள்பட நான்கு மாநிலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. குறிப்பாக மின்சார விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ஆந்திர மாநில அதிகாரிகளுக்கு ஒரு பெரிய தொகை கைமாற்றப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
2023 - 24 ஆம் ஆண்டுகளில் அதிக விலைக்கு சோலார் மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிஸா மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், அதனை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாக நியூயார்க் புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.
அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசின் உயர் அதிகாரிகளை கெளதம் அதானி பலமுறை சந்தித்துள்ளதாகவும், அதுதொடர்பான அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் 54 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மின்வாரியம் தொடர்பான எவ்வித ஒப்பந்தமும் அதானி குழுமத்துடன் செய்யப்படவில்லை என்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை" "மின்வாரியம் தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை" "சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது" "இது தொடர்பாக என்னிடம் நேரடியாகவோ அல்லது மின் துறை அதிகாரிகளுடனோ கேட்டு தெரிந்துகொண்ட பிறகே பதிவிட வேண்டும்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார்.
இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டை மறைத்தாலும், இதன் உண்மை நிலை என்ன என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் நீதியரசர்களும் தாமாக முன்வந்து இந்த ஊழல் குற்றச்சாட்டை ஆய்வு செய்து, உண்மையில் ஊழல் நடந்திருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
அமெரிக்கா நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்கள் என்றால் "நெருப்பில்லாமல் புகையாது" என்கின்ற பழமொழிக்கு ஏற்ப, புகாரும், ஊழல் குற்றச்சாட்டும் வரவேண்டியதன் அவசியம் என்ன? என்பது மக்கள் கேள்வியாக உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இதற்கான விளக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications