புழல் சிறையில் ஜெயக்குமார்.. முதல்வர் மீது கோபத்தில் அதிமுக?.. நாளை தணியுமா?.. பாஜக என்ன செய்யும்?
சென்னை: சென்னையில் நாளை முதல்வர் ஸ்டாலின் எழுதிய சுய சரிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பாஜக, அதிமுக சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தான் அரசியலில் ஈடுபட்ட காலத்தில் தான் சந்தித்த இடர்கள், மிசா சட்டம், போராட்டங்கள் உள்ளிட்டவை முதல் தற்போது வரை நடந்தது என்ன என்பது குறித்து சுயசரிதையை எழுதியுள்ளார். அதற்கு உங்களில் ஒருவன் என்ற பெயரை வைத்துள்ளார்.
அந்த புத்தக வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த புத்தகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிடுகிறார். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தேசிய அளவில்
தேசிய அளவில் தலைவர்கள் நாளை சென்னையில் ஒன்று கூடுகிறார்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகரராவ், தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்வாரா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.

அதிமுக சார்பில் யார் பங்கேற்பு
முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்காக பெரும்பாலான அரசியல் கட்சியினருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அதிமுகவுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஏற்பாடு செய்த விழாக்களில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். கருணாநிதி சிலை திறப்பு விழாவிலும் அதிமுக சார்பில் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

ஜெயக்குமார் கைது
சட்டசபையில் அதிகம் பேசுவது ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும்தான் என்றால், வெளியில் கட்சியின் முகமாக பேசுவது ஜெயக்குமார்தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்த நாள் முதல் ஜெயக்குமார்தான் பெரும்பாலான பிரஸ்மீட்களில் அதிமுக குறித்தும் அதிமுக ஆட்சி குறித்தும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

சிறையில் ஜெயக்குமார்
ஆனால் தற்போது அவர் திமுக பிரமுகரை தாக்கியதாக எழுந்த புகாரில் சிறையில் உள்ளார். முன்னாள் அமைச்சர் வேலுமணி நடத்திய போராட்டத்தால் அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திலும், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவத்திலும் திமுக அரசு மீது அதிமுக கடும் கோபத்தில் உள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் நாகரீகம் கருதி முக்கிய தலைவர்கள் யாரும் செல்லாமல் இரண்டாம் நிலை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் யாரையேனும் அனுப்ப வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

வானதியை மேடைக்கு அழைத்த முதல்வர் ஸ்டாலின்
அது போல் பாஜகவை பொருத்தமட்டில் கோவையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஒரு அரசு விழாவில் கூட அதிமுக எம்எல்ஏக்களுக்கும், பாஜக எம்எல்ஏ வானதிக்கு அழைப்பு விடுத்து முன் வரிசையில் இருக்கைகள் அமைப்பட்டிருந்தன. ஆனால் விழாவுக்கு வானதி மட்டுமே வந்திருந்தார். அப்போது தனக்கான இருக்கையில் அமர சென்ற வானதியை மேடையில் வந்து அமருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். நீட், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட விவகாரங்களில் முதல்வர் ஸ்டாலின் இதுவரை மத்திய அரசை நோக்கி மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததில்லை. ஆட்சிக்கு வந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக நீட் விவகாரத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தியதில்லை.

நீட் விவகாரம்
தமிழக நலனை கருத்தில் கொண்டு சில விவகாரங்களில் மிகவும் கடுமை காட்டாமல் அதே நேரத்தில் மாநில உரிமைகளை விட்டுக் கொடுப்பதில் சமரசம் செய்து கொள்ளாமலும் முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகம் வந்த போது கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 11 மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவுக்கு வருகை தரவிருந்த பிரதமருக்கு எதிர்ப்பை தெரிவிக்காமல் வரவேற்போம் என்றார்கள்.

பாஜக சார்பில் யார் பங்கேற்பு
திமுகவுக்கு மாற்று பாஜகதான் என பாஜக மூத்த தலைவர்கள் சொல்லி வரும் நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நாளை நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு பாஜக சார்பில் யார் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக மீது கோபம் கொண்டிருக்கும் அதிமுக, பாஜகவில் யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதை போல் பொதுவானவர்களில் யாரெல்லாம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரஜினி இடம் பெற்றுள்ளார்.

ரஜினிகாந்த் வருவாரா
ரஜினிகாந்திற்கு திமுகவின் பூச்சி முருகன் நேரில் போய் அழைப்பிதழ் வைத்தார். இதனால் அவர் வருவாரா என்ற கேள்வி எழுகிறது. எப்போதும் வாக்களிக்க தவறாமல் வரும் ரஜினிகாந்த் இந்த முறை வாக்களிக்க வரவில்லை. அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கலந்து கொள்வதை தவிர்த்திருக்கலாம் என உறுதிப்படுப்படாத தகவல்கள் வெளியாகின. ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த சில நாட்களில் பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டு திருமண நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இது சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்து விவரம் அறிந்தவர்கள் கூறுகையில் ஒரு வேளை தேர்தல் நேரத்தில் ரஜினிக்கு உடல் நலம் பாதித்திருக்கலாம். அதனால் அவர் வெளியே வர முடியாத சூழல் இருந்திருக்கலாம். தேர்தலுக்கு வராததையும் அன்புசெழியன் வீட்டு திருமணத்திற்கு சென்றதையும் முடிச்சு போடக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரியான சந்தர்ப்பமும் சூழலும் அமையும். இதனால் இதை விமர்சிப்பது சரியல்ல என தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் ரஜினிகாந்த். தான் அரசியலுக்கு வருகிறேன் என்பதை அறிவித்தவுடன் முதலில் ரஜினி போய் சந்தித்து ஆசி பெற்ற நபர் கருணாநிதிதான். அது போல் முதல்வர் ஸ்டாலினும் ரஜினியும் நண்பர்கள். எனவே ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்த் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications