எடப்பாடியின் “ராஜ தந்திரம்”.. தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியா? இனி மீண்டும் திமுக VS அதிமுக யுத்தம்
சென்னை: பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்து உள்ளதன் பின்னணியில், பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதுகுறித்து சற்று அலசுவோம்.
2019 தேர்தல் முதல் பாஜகவுடன் கூட்டணியை தொடர்ந்து வந்த அதிமுக, தற்போது கூட்டணியை முறிப்பதாக அறிவித்து இருக்கிறது. பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா என அதிமுகவினர் பெரிதாக மதிக்கும் தலைவர்களை கூட்டணியில் இருந்துகொண்டே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியதாக இந்த முறிவுக்கு காரணம்.

இதற்கு முன்பே டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர்களிடம் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க சொன்ன அதிமுக தலைவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இது அண்ணாமலைக்கு கூடுதல் உற்சாகத்தை தர தொடர்ந்து அவர், தமிழ்நாட்டில் பாஜகவை கூட்டணியின் தலைமைபோல் காட்டி வந்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் சுழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று முடிவெடுத்து உள்ளார்கள்.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்குமோ என்ற கேள்வி எழுந்தது. அதற்கு காரணம், இதில் பாஜக மாநில தலைமையை மட்டுமே அதிமுக விமர்சித்துள்ளது. டெல்லி குறித்து வாயே திறக்கவில்லை. எனவே மத்தியில் பாஜகவுக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், அந்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூட்டத்தில் பேசி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. "கூட்டணி முறிவு தொடர்பாக சந்தேகமே வேண்டாம். பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்துவிடுமோ என்று சந்தேகப்பட தேவையில்லை. 2024 மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது.

சிறுபான்மை மக்களை கட்சியின் நிலைபாடு தொடர்பாக சந்தித்து நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும். மக்களிடம் கட்சியின் கருத்துக்களை உறுதியாக எடுத்துச் சொல்லுங்கள்." என அவர் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். 2019 தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போன்ற அனைத்திலும் பாஜக அடுத்தடுத்து தோல்வியடைந்தது.
இதற்கு பாஜகவுடனான கூட்டணியே காரணம் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழந்ததே இதற்கு முக்கிய காரணம் என அதிமுக மூத்த தலைவர்களே பல முறை தெரிவித்து உள்ளார்கள். குறிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து இதே கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியும் இதை உணர்ந்து இருக்கிறார் என்பது அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் இருந்தே தெரிகிறது. பாஜகவுடனான கூட்டணியால் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக VS மோடி என்ற போக்கே இருக்கும்.
இதனை முன்புபோல் திமுக VS அதிமுக என்ற போட்டியாக மாற்றினால் அதிமுகவுக்கு கூடுதல் எம்பிக்கள் கிடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications