அதிமுக பாஜக கூட்டணி அந்து போச்சு.. கிளம்பு கிளம்பு.. தேனியில் அலப்பறை கிளப்பும் போஸ்டர்கள்
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி முறிவை தீபாவளியாக கொண்டாடுகின்றனர் இரண்டு கட்சி தொண்டர்களும். அதிமுகவினர் நன்றி மீண்டும் வராதீர்கள் என்று ஹேஸ்டேக் போட்டு பதிவிட்டால் பாஜக தொண்டர்களோ.. கிளம்பு கிளம்பு அந்து போச்சு என்று அலப்பறை கொடுத்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்பு ஆரம்பித்து விட்டது. யாருடன் யார் கூட்டணி என்று தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று கூறிக்கொண்டே அதிமுக நிர்வாகிகளும் பாஜக நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் வசை பாடி வந்தனர்.

பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பிறகு அதிமுக இடையேயான உறவு தாமரை இலை தண்ணீர் போலவே இருந்து வந்தது. கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் பிளவு வரலாம் என்று கூறப்பட்டு வந்தது. அதனை உறுதிபடுத்தும் விதமாகவே ஒவ்வொரு முறையும் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அண்ணாமலை பொடி வைத்தே பேசினார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே அவர் அதிமுக கூட்டணியை விட்டு விலக தயாராகி விட்டதாகவே தெரிகிறது. நிர்வாகிகளையும் அதற்காக தயார் படுத்தியே வந்துள்ளார் அண்ணாமலை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று பகிரங்கமாகவே பேசினார்.
கடந்த மார்ச் மாத இறுதியில் தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோதும், "பாஜவினர் இதுவரை கூண்டுக்கிளியாக இருந்தது போதும்.. தமிழகத்தில் களம் மாறிவிட்டது.. உங்களால் பறக்க முடியும். எனவே கூண்டை உடைத்துக் கொண்டு பறக்க தயாராகுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுவோம். வரும் 2024 தேர்தலில் வெற்றிபெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்து விட்டது தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் தயாராகிவிட்டது. நமக்கான நேரம் வந்துவிட்டது. பாஜகவினர் கூனி குறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை.. நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம் என்று சொன்னார் அண்ணாமலை.

உடைந்த கண்ணாடி ஒட்டாது என்பது போல மனதளவில் பிரிந்த அதிமுக பாஜக உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமானது. அண்ணாமலையும் அதற்கு ஏற்றார் போல எதையாவது பேசி அதிமுக நிர்வாகிகளை எரிச்சல் படுத்தி வந்தார். இனியும் அண்ணாமலை தலைமையை ஏற்று கூட்டணியில் இருக்க வேண்டுமா என்று அதிமுக தலைமையும் நிர்வாகிகளும் பேச ஆரம்பித்தனர்.
எங்களுக்கு டெல்லி தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக நிர்வாகிகளும் கூறினாலும் அண்ணாமலையின் பேச்சு ஒவ்வொன்றும் சுளீர் என்று பலரையும் பதம் பார்த்தது. இனியும் கூட்டணியில் நீடிப்பது சரியில்லை என்று ஜெயக்குமாரை வைத்து பேட்டி தர வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனாலும் இது நாடகம் என்று பேசினர். அதன் பிறகும் அதிமுக நிர்வாகிகள் டெல்லிக்கு சென்று பாஜக நிர்வாகிகளிடம் பேசி பார்த்தனர். பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக வைத்த கோரிக்கையை பாஜக தலைவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராகவே இல்லை.

இந்த நிலையில்தான் நேற்றைய தினம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடி அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்தது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது பற்றி பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் கருத்து கூறக்கூடாது என்று உடனடியாக பாஜக தலைமை அறிவித்தது. அதனை ஏற்று அண்ணாமலை எந்த கருத்தும் கூறவில்லை. அதே நேரத்தில் அதிமுக தொண்டர்கள் கூட்டணி பிளவை கொண்டாடி தீர்த்தனர். பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை கொடுத்தும் கொண்டாடினர்.
அதே நேரத்தில் பாஜகவினரும் தங்கள் பங்குக்கு கொண்டாடினர். ட்விட்டரில் பதிவிட்ட பாஜக தொண்டர்கள் சிலர். எங்களுக்கு தீபாவளி எடப்பாடிக்கு வயிற்று வலி என்று பதிவிட்டனர்.
அண்ணாமலைதான் தெற்கில் கிங் என்றும் போஸ்டர் போட்டு அதை பகிர்ந்தனர். இங்க நான்தான் கிங் என்று அண்ணாமலை படத்தின் மீது எழுதி பரபரப்பை கிளம்பினர் பாஜக நிர்வாகிகள். கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் பாதயாத்திரை பயணம் செய்த அண்ணாமலைக்கு வரவேற்பு பிரம்மாண்டமாகவே இருந்தது. அப்போது போடப்பட்ட பாடல்தான் ஹைலட்.
என் மக்கள் புது புரட்சி நடை பயணம் நீ துணிவுடன் நடந்திட வா

ஏழைக்கு இவன்தான் பனிமலைதான்
இனி எதிரிக்கு இவன்தான் எரிமலைதான்
தமிழகம் தாங்கும் தாமரைதான்
தமிழுக்கு இவன்தான் வளர்பிறைதான்
நரிக்கூட்டம் இனிமே ஓடுமே
நல்ல உள்ளமே நாட்டை ஆளுமே
பொய் வேஷம் போட்ட கூட்டமே
அந்த வேஷத்தை கலைக்கும் நேரமே
அட மோடியிடம் பயின்றவன் நான் அண்ணாமலைதானே
புறப்படுடா புது புரட்சியடா..
தமிழகத்தை நீ மீட்டிட வா
என்ற வரிகளை திரும்ப திரும்ப போட்டு யாருக்கோ சேதி சொன்னார்கள் பாஜக நிர்வாகிகள்.

மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் "ஓரளவிற்கு மேல் நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சுதான்" என்று ஜெயிலர் பட வசனத்தை மேற்கோள் காட்டி அதிமுகவை சீண்டியிருந்தனர் பாஜக நிர்வாகிகள். அதே போல தேனி மாவட்டத்தில் நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்தான்தான் அல்டிமேட். "கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்பு.. அலப்பறை கிளப்பறோம் தலைவர் நிரந்தரம்" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டி பரபரப்பை பற்ற வைத்துள்ளனர். அதிமுகவினர் சைலண்ட் மோடுக்கு போனலும் பாஜகவின் அலப்பறை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். லோக்சபா தேர்தல் வரைக்கும் இது போன்ற பதிவுகள் போஸ்டர்கள் பலருக்கும் வேடிக்கையாகத்தான் இருக்கும்.












Click it and Unblock the Notifications