"பாதம் விழுந்து பதவி வாங்கிய பச்சோந்தி!" காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் எடப்பாடியை வறுத்த மருது
சென்னை: 'நமது அம்மா' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும் ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்படும் மருது அழகுராஜ், "யார் பச்சோந்தி" என்ற கவிதை எழுதி அதில் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதல் இன்னும் முடியவில்லை. இரு தரப்பும் எதிர்த் தரப்பை மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்படும் மருது அழகுராஜ், கவிதை எழுதி அதில் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மருது அழகுராஜ் கவிதை
நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் கூட தொண்டர்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எது சாதகமோ, அதற்கு ஏற்றவாறு கட்சி மாறுபவர் தான் ஓபிஎஸ். பச்சோந்தியைவிட அதிகமாக நிறம் மாறும் நபர்" என விமர்சித்து இருந்தார். இந்நிலையில், "யார் பச்சோந்தி!" எனக் கவிதை எழுதியுள்ள மருது அழகுராஜ், அதில் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

பாதத்தில் விழுந்து
சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றவர் என்று ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இந்த கவிதையும் அப்படியே தொடங்குகிறது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்துவிட்டு அவர்களுக்குத் துரோகம் செய்தவர் என்று சாடியுள்ளார்.

யார் பச்சோந்தி..
பாதத்தில் விழுந்து பதவியை வாங்கிவிட்டு
பதவி தந்தவரையே நாய் என்று விமர்சித்த
நன்றி கெட்ட பச்சோந்தி யார்..
ஆர்.கே.நகர் தேர்தல் வரை
தினகரனுக்கு தொப்பி போட்டு
பிரச்சாரம் செய்து விட்டு..
அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று
நீட்டி முழங்கி நிறம் மாறிய பச்சோந்தி யார்...

ஓபிஎஸ் தயவுடன்
மேலும், ஓபிஎஸ் தயவுடன் 4.5ஆண்டுகள் ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி, இப்போது அவரையே எதிர்ப்பதாகச் சாடியுள்ளார். மேலும், சேலத்தில் ஒற்றை தலைமை எனப் பேசிவிட்டு, சென்னைக்கு வந்ததும் மாற்றிய பேசிய எடப்பாடி தான் பச்சோந்தி என்றும் அவர் சாடியுள்ளார்.
ஓ.பி.எஸ் தயவோடு நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்திவிட்டு
ஒற்றைத் தலைமை கற்பனை என சேலத்தில் பேசிவிட்டு
சென்னை வந்து சேருவதற்குள் நிறம் மாறிய பச்சோந்தி யார்...

அயோக்கிய பச்சோந்தி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்லை, அதை அப்படியே மாற்றி பேசியதாகவும் ஜெயலலிதா பதவியை எடப்பாடி பழனிசாமி ஆக்கிரமிக்க நினைப்பதாகவும் அவர் விளாசியுள்ளார்.
அம்மாவுக்கே நிரந்தர பொதுச் செயலாளர் இருக்கை என,
யோக்கினாக பேசிவிட்டு.
வார்த்தை ஈரம் காய்வதற்குள்.
அம்மாவின் பதவியை ஆக்கிரமிப்பு செய்திட,
அம்மாவையே நீக்கிய அயோக்கிய பச்சோந்தி யார்...
இப்படி... தரைநக்கி பிழைப்பதும்
தன்னலமே இலக்கு என செய் நன்றி மறப்பதும்,
குத்துக் கொல் பழனிக்குத் தான்
ரத்தத்தில் ஊறிய பழக்கம்...

காலில் விழுந்து
முன்பு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த சமயத்தில் அரசு விழா ஒன்றில் கம்பன் எழுதி இராமாயணத்தைச் சேக்கிழார் எழுதியதாக தவறுதலாக கூறியிருந்தார். அதையும் விமர்சித்த மருது அழகுராஜ், எடப்பாடி கட்சியின் அனைத்து தொண்டர்களின் காலிலும் விழுந்து வணங்க வேண்டும் என்றும் சரமாரியாக விமர்சித்து உள்ளார்.
கம்பன் எழுதி இராமாயணத்தையே
சேக்கிழார் எழுதியதாக அரசு விழாவிலேயே அடிச்சுவிட்டு
கலர் மாற்றும் காரியத்தில் பச்சோந்தியையே
முச்சந்தியில் நிலைகுத்தி நிற்க வைத்த
கூவத்தூர் கோமாளி தான் தொண்டர்களின் காலில் விழுந்து
மன்னிப்பு கேட்க வேண்டும்..
அதுவும் செங்கோட்டையன் சேலம் கண்ணன் முத்துச்சாமி
தொடங்கி சசிகலா தினகரன் ஓ.பி.எஸ் வரை புரியுதா...












Click it and Unblock the Notifications