"நான்தான் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்!" என்ன நடந்தாலும் இதுதான் முடிவு! அடித்து சொல்லும் எடப்பாடி
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
அதிமுகவில் இன்று காலை முதலே பல்வேறு ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டு உள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம்
முதலில் 10 நிமிடங்கள் செயற்குழு நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அடுத்த பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய 4 மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் இதற்குப் பொறுப்பாளர்களாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஓபிஎஸ் நீக்கம்
அதேபோல ஓ பன்னீர்செல்வத்தை பொதுக்குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பொதுக்குழுவில் பங்கேற்ற தொண்டர்கள் கோஷமிட்டனர். அதன்படி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கச் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிமுக தொண்டர்கள் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

பதிலுக்கு அறிவிப்பு
இவையெல்லாம் வானகரத்தில் நடைபெற்று வந்த நிலையில், மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்திலும் பல சம்பவங்கள் அரங்கேறின. எடப்பாடி ஆதரவாளர்களை மீறி, ஓபிஎஸும் அவரது ஆதரவாளர்களும் உள்ளே நுழைந்தனர். அங்கு அடிதடி ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவிய நிலையில், போலீசார் குவிக்கப்பட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமியையும் கே.பி.முனுசாமியையும் கட்சியில் இருந்து நீக்குவதாகப் பதிலுக்கு அறிவித்தார் ஓபிஎஸ்!

தேர்தல் ஆணையம்
ஓபிஎஸ் செயல்பாடுகளை எடப்பாடி மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார். அவர் மட்டுமின்றி ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன் எனப் பல முக்கிய அதிமுக நிர்வாகிகளும் ஓபிஎஸை கடுமையாகச் சாடினார். இப்படி இரு தலைவர்களும் மாறி மாறி நீக்குவதாக அறிவித்து வரும் நிலையில், அதிமுக தலைமை கழகம் சத்தமில்லாமல் ஒன்றைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

ட்விட்டர் பயோ மாற்றம்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்ட தீர்மானமும் பொதுக்குழுவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட விதிகளையும் அதிமுக தலைமைக் கழகம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிசாமியும் தனது ட்விட்டர் பயோவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று மாற்றி உள்ளார்.

இடைக்கால பொதுச் செயலாளர்
முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி தரப்பு கூறி இருந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பயோவை மாற்றி தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றி இருந்தார். இந்தச் சூழலில் அவர் இப்போது இடைக்கால பொதுச் செயலாளராக என்று மீண்டும் தனது பயோவை மாற்றி உள்ளார்.

அதிமுக ட்விட்டர்
அதேபோல அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்ட நிலையில், அக்கட்சி ட்விட்டர் பக்கத்தின் புகைப்படம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ படத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இருவரின் படமும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில், இப்போது ஓபிஎஸ் படம் முற்றிலுமாக நீக்கப்பட்டு, எடப்பாடி படம் மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications