ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு அதிமுக ஆதரவு.. கடிதம் அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இதுபற்றி சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில் தான் கட்சிகள் சார்பில் கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு அளித்து பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனியே சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே இந்தியாவில் ஒன்றாக நடத்தப்படுகிறது.
இந்நிலையில் அனைத்து மாநில சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆர்வமாக உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏன்?
இந்தியாவில் அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் தடைபடுவதோடு, செலவும் அதிகரிப்பதாக மத்திய அரசு கருதியது. மேலும் இதற்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற முறையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்திய சட்ட ஆணையம் கடிதம்
தற்போது ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்துவது தொடர்பாக சட்டக் குழு பரிசீலனை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் இந்திய சட்ட ஆணையம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்படி கடிதம் அனுப்பியது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுக்கும் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதிமுக ஆதரவு
எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பிவைத்தது. அதில் ஜனவரி மாதம் 16ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என இந்திய சட்ட ஆணையம் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு
முன்னதாக இந்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு இருந்ததால் அவரும், அவரது தரப்பும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்திய சட்ட ஆணையம் இப்படி குறிப்பிட்டு கடிதம் அனுப்பியதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications