தங்கம் வென்ற பிரக்ஞானந்தா-நந்திதா.. ‛‛கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள்’’..விஜயபாஸ்கர் சொன்ன மெசேஜ்
சென்னை: ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் வீராங்கனை நந்திதா ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு தமிழரான அதிபன் வெண்கலம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
இந்தியாவில் செஸ் விளையாட்டு பிரபலமானது என்ற போதிலும், சமீபகாலமாக அதன் மீது இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தென் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் செஸ் விளையாட்டுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அறிவு மட்டுமல்லாமல் சமயோகிஜ புத்தியும் செஸ் விளையாட்டுக்கு மிகவும் அவசியம். மேலும், செஸ் விளையாடுவதால் சிறுவர்களின் அறிவுத்திறன் பல மடங்கு பெருகுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இன்றைய தலைமுறை பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை செஸ் விளையாட்டில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆர்வத்தை பெருக்கிய செஸ் ஒலிம்பியாட்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். உலக அளவில் மிகவும் பிரபலமான செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் நடைபெறுவது மிகப் பெருமையான தருணமாக உணரப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட விளம்பரங்கள் பட்டித்தொட்டி எல்லாம் செஸ் ஒலிம்பியாட்டை கொண்டு சேர்த்தது. 12 நாட்கள் இந்தப் போட்டி நடைபெற்றது.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்..
செஸ் ஒலிம்பியாட் முடிந்த கையோடு, ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி 9 சுற்றுகளாக நடத்தப்பட்டது. ஓபன் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், வங்கதேசம், கஜகஸ்தான் உட்பட 13 நாடுகளிலிருந்து 142 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

கலக்கிய தமிழகம்
இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஓபன் பிரிவில் 92 வீரர்கள் கலந்துகொண்டு பலப்பரீட்சை நடத்தினர். ஓபன் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 5 வெற்றி, 4 டிரா என தோல்வியை சந்திக்காமல் 7 புள்ளிகளை கைப்பற்றி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், மற்றொரு தமிழக வீரரான அதிபன் 4 வெற்றி, 5 டிரா என 6.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார். இவ்வாறு, ஓபன் பிரிவில் முதல் 20 இடங்களில் 17 இந்தியர்கள் இருந்தனர்.
இதேபோல, மகளிருக்கு நடைபெற்ற தொடரில் 50 வீராங்கனைகள் மோதினர். இதில் தமிழக வீராங்கனை நந்திதா 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளை வென்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

விஜயபாஸ்கர் வாழ்த்து
இந்நிலையில், ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்யானந்தாவுக்கும், நந்திதாவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியானது உங்கள் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரங்களாக இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications