சல்லி சல்லியாக நொறுங்கிய ஓபிஎஸ் கனவு..மனுக்களை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்..அடுத்தது என்ன?
சென்னை: அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

ஹைகோர்ட்டில் மனு
பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்தார். இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கும் முட்டுக்கட்டை போட்டது ஓ.பன்னீர் செல்வம் தரப்பு.

அவசர வழக்குகள்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கடந்த 19ஆம் தேதியன்று விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம் மனு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓ.பன்னீர் செல்வமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க கோரி முறையிட்டனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த புதன்கிழமை நடைபெற்றது. வாதங்கள் நிறைவடைந்து எழுத்துப்பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்புக்கு பலத்த அடி
ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த இரு வழக்குகளிலும் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொதுச்செயலாளர்
ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவதில் எந்த தடையும் இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து உடனடியாக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

நிரந்தர பொதுச்செயலாளர்
ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதில் எந்த தடையும் இல்லை என்று இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஓ.பன்னீர் செல்வம் அப்பீல்
தனது தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு தீர்ப்பு தங்களுக்கு எதிராக வந்துள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த இரு வழக்குகளிலும் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அவரசப்படுகிறார் இபிஎஸ்
இந்த தீர்ப்பு நிரந்தரமல்ல என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் சுப்பு ரத்தினம். அவரசப்பட்டு பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளார். இரண்டு நீதிபதிகள் தீர்ப்பை வேறு மாதிரி அளித்தால் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்றும் கூறியுள்ளார் சுப்பு ரத்தினம்.












Click it and Unblock the Notifications