திக்திக்.. அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் வழக்குகளில் நாளை ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதிமுக விவகாரத்தில் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணியினர் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் இருந்தபோதே எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவில் பொதுச்செயலாளராக்கும் வகையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனால் ஓ பன்னீர் செல்வம் தரப்பு அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் அணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டன. இதையடுத்து அதிமுக வழக்குகள் அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம். ரிசல்ட்டை வெளியிடக்கூடாது என கூறியது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிச்சாமி மட்டும் மனு தாக்கல் செய்த நிலையில் இன்னும் முடிவு வெளியிடப்படாமல் உள்ளது. இதனால் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மகிழ்ச்சியடைந்தது.

எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
மேலும் அன்றைய தினம் எழுத்துப்பூர்வமாக வாதம் செய்ய ஓ பன்னீர் செல்வம் அனுமதி கோரியது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இநு்நிலையில் கடந்த 24ம் தேதி ஓ பன்னீர் செல்வம் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதிமுகவில் இரட்டை தலைமை பதவிகள் குறித்து நிலுவையில் இருக்கும் மூலவழக்கு விசாரணையின் அடிப்படையில் தான் முடிவு செய்ய முடியும். தற்போது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. பொதுக்குழு தீர்மானங்களும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் உரிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது உள்ளிட்ட பிற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை காலை தீர்ப்பு
இந்நிலையில் தான் இந்நிலையில் தான் 2022 ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்க்கும் வழக்குகளின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு இந்த தீர்ப்பை வழங்குகிறார். இது அதிமுகவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்பதால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications