அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லுமா? இன்று தீர்ப்பு வெளியாவதில் சிக்கல்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் தான் இன்று தீர்ப்பு வெளியாவதில் சிக்கல் உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சி விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில் தான் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் நீதிமன்றத்தை ஓ பன்னீர் செல்வம் தரப்பு நாடியது.

அவசர வழக்காக விசாரணை
இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டாதல் ஏப்ரல் 11ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 22ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதம்
ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஓ பன்னீர் செல்வம் தரப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரி வாதாடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சட்டப்படி பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க கூடாது என வாதிடப்பட்டது.

மார்ச் 24ல் தீர்ப்பு என அறிவிப்பு
இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம். ரிசல்ட்டை வெளியிடக்கூடாது என கூறியது. மேலும் மார்ச் 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி குமரேஷ் பாபு கூறினார். இதனால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும் என அதிமுகவினர் எதிர்பார்த்தனர்.

இன்று தீர்ப்பு வெளியாவதில் சிக்கல்
இந்நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இன்றைய நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பான வழக்குகள் நேற்று பட்டியலிடப்பட்டன. அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும் வழக்கு பட்டியலிடப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளன. இதனால் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. மாறாக இந்த வழக்கில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications