தீர்ப்பில் நிறைய குழப்பம்.. உடனே மேல்முறையீடு.. உச்சநீதிமன்றத்தில் வெற்றி உறுதி.. விளக்கிய புகழேந்தி
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பில் குழப்பம் உள்ளது. தாமதமின்றி தவறுகளை சுட்டிக்காட்டி உடனடியாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். உச்சநீதிமன்றத்தில் தான் நாங்கள் நீதி வாங்கி வருகிறோம். இதனால் வெற்றி உறுதி'' என ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக அணியாக பிரிந்தனர்.
கடந்த ஜூலை மாதம் 11ல் நடந்த பொதுக்குவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

இபிஎஸ்க்கு ஆதரவான தீர்ப்பு
இதில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இது ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக அமைந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வும் செல்லாத நிலை ஏற்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவு
இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த தீர்ப்பு என்பது ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இதுபற்றி ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக பெங்களூர் புகழேந்தி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குழப்பமான தீர்ப்பு
உயர்நீதிமன்றத்தில் யார் யாருக்கு சாதகம், பாதகமாக தீர்ப்பு வந்தாலும் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். எனக்கு கிடைத்த தகவலின் படி அவர்கள் அப்பீல் செல்ல இருப்பதாக நேற்று இரவு தகவல் கிடைத்தது. பொதுக்குழு தொடர்பாக முன்பு 75 பக்கங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில் எல்லாமே மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இருநீதிபதிகள் கொண்ட பெஞ்ச் 126 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பில் குழப்பம் உள்ளது.

தவறுகளை கண்டு மேல்முறையீடு
இந்த தீர்ப்பில் உள்ள தவறுகளை கண்டு உச்சநீதிமன்றத்துக்கு எடுத்து செல்ல உள்ளோம். தற்போது ஜூன் 23ம் தேதிக்கு நீதிமன்றம் செல்லவில்லை. சுற்றி சுற்றி ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் தான் நிற்கிறார்கள். ஜூன் 23ல் கூட்டப்பட்ட பொதுக்குழுவே தவறு என்பது தான் எங்களின் வழக்காக உள்ளது. மேல்முறையீட்டுக்கு செல்ல நல்ல வழக்கு. உச்சநீதிமன்றத்துக்கு செல்வோம். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தது தெளிவாக உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வெற்றி
ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று நாங்கள் நீதி வாங்கி வந்துள்ளோம். ஓ பன்னீர் செல்வம் ஆலோசனைக்கு பிறகு உடனே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்ல உள்ளோம். இதில் தாமதம் இல்லை. இந்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனைத்து உரிமைகளும் எங்களுக்கு உள்ளது. இதனை செய்வோம். நிச்சயம் வெற்றி உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இறுதியானது
நாம் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டும். நீதிமன்றங்களுக்கு கட்டுப்பட்டது தான் தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டது இல்லை நீதிமன்றம். உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இறுதியானது. இதனால் உச்சநீதிமன்றம் கூறுவதை அனைவரும் கேட்க வேண்டும். பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு ஓ பன்னீர் செல்வத்துக்கு மக்கள் ஆதரவு உள்ளதை பார்த்துள்ளேன். சேலத்தில் மிக விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும். சரித்திரத்தில் இல்லாத கூட்டமாக அது அமையும். நானே முன்னிலையில் இறங்கி கூட்டம் நடத்துவேன். சேலம் வரலாறு படைக்கத்தான் போகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications