மேட்டரே வேற.. தளவாயை தூக்கியடித்த எடப்பாடி! உள்ளடி வேலையால் காலியான பதவி! பின்னணியில் அவங்களா?
சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த தளவாய் சுந்தரம், திடீரென பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தமிழக அளவில் பேசு பொருளாகி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை அதிமுகவினர் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் தனக்கு நெருக்கமானவரை எடப்பாடி நீக்க காரணம் என்ன என விசாரித்த போது ஆர்எஸ்எஸ் பேரணி மட்டும் காரணம் இல்லை என்கின்றனர் அக்கட்சியினர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு பிறகு தற்போது அதிமுகவில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களில் அறியப்பட்ட முகங்களாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், பொன்னையன் உள்ளிட்ட சில சீனியர்களை சொல்லலாம்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாடு பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்தவர் தான் தளவாய் சுந்தரம். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர். 2016 சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் கிடைக்காத நிலையில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரத்திற்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற பொறுப்பு வழங்கப்பட்டது.
மதுரையை தாண்டி எடப்பாடி பழனிச்சாமி எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அங்கு கட்டாயம் தளவாய் சுந்தரம் இருப்பார். அந்த அளவுக்கு நெருக்கமான தளவாய் சுந்தரத்தின் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறிக்க காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தது தான் என்பது வெளிப்படையான விஷயம். ஆனால் உட்கட்சி பூசல் காரணமாக அவருக்கு எதிராக தொடர்ந்து பல புகார்கள் தலைமைக்கு பறக்க இறுதியாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை வைத்து அவரது பதவி பறிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
2011ம் ஆண்டிலிருந்து அதிமுகவில் ஓரம் கட்டுப்பட்ட வரும் தளவாய் சுந்தரம் எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கத்தை பயன்படுத்தி மீண்டும் கட்சிக்குள் வந்தார். இந்த நிலையில் தனது பகுதிக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மட்டுமல்ல அது ஏற்கனவே பல நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றதாகவும் ஆனால் கட்சித் தலைமைக்கு எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
அப்போது அதனை கண்டும் காணாமல் தலைமை இருந்திருக்கிறது. தற்போது கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சரான பச்சைமால் - அசோகன் ஆகியோர் தலைமையில் இரு கோஷ்டிகளாக அதிமுக செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் பங்கேற்றதை தொடர்ந்து தளவாய் சுந்தரம் குறித்து எதிர் அணியினர் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். மேலும் தலைமைக்கு இந்த தகவலை கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த மக்களவைத் தேர்தலை தளவாய் சுந்தரத்தின் பரிந்துரையை ஏற்று பசலியான் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக நான்காம் இடத்திற்குச் சென்றது இதற்கும் தளவாய் சுந்தரம் தான் காரணம் என எதிர் அணியினர் போட்டுக் கொடுத்துள்ளனர். பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறிய நிலையில் தற்போது ஆர்எஸ்எஸ் உடன் நெருக்கம் காட்டியதே தளவாய் சுந்தரத்தின் பதவி பறிப்புக்கு காரணம் எனவும், இதில் எதிர் கோஷ்டியின் உள்ளடி வேலைகள் மிகவும் முக்கியம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications