"திமுகவினர் என சொல்லி கொண்டு.. அதிமுகவினர் திட்டமிட்டு குற்றம் செய்கிறார்கள்!" ஆர்எஸ் பாரதி பகீர்
சென்னை: ஈசிஆரில் நடந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். மேலும், திமுக கொடியில் வந்து அதிமுகவினர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு திமுகவுக்கு எதிராகப் பொய்களைப் பரப்பி வருவதாகவும், ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என நினைத்து இதுபோல பேசி வருவதாகச் சாடியுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி:
இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி மேலும் பேசுகையில், "ஈசிஆர் சாலையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அந்தச் சம்பவத்தை திமுகவுடன் தொடர்புப் படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.. எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர்.. நீண்ட காலமாகச் சட்டசபையில் இருக்கக்கூடியவர். அப்படிப்பட்ட ஒருவர் எவ்வளவு பொறுப்பு உணர்ச்சியுடன் பேச வேண்டும் என்பதை மறந்துவிட்டு, மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் பொய் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பேசியிருந்தார்.
திமுக கொடியுடன் அந்த கார் இருந்ததாகவும்.. திமுக கொடி போட்டுக்கொண்டு போனால் அது குற்றம் செய்ய லைசன்ஸா என்று எல்லாம் பேசியிருக்கிறார். இன்று உண்மை வெட்ட வெளிச்சமாகவே வந்துவிட்டது. அந்தச் சம்பவம் தொடர்பாக 4,5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுகவை சேர்ந்தவர்:
இது குறித்துக் காவல் துறை துணை கமிஷனரும் கூட செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருந்தார். அந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுகவை சேர்ந்தவர். அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் அதிமுக நிர்வாகியின் உறவினர். அது மட்டுமின்றி சந்துருவே அதிமுகவில் இருப்பவர் தான்.
இந்த விவகாரத்தில் இன்னொரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். அந்த கார் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரின் சகோதரர் மகனின் பெயரில் தான் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த காரை அவருடைய உறவினர்களே பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள்.
குற்றங்களைச் செய்வதே அதிமுக நிர்வாகிகள் தான்:
அதிமுகவினர் செய்யும் ஒவ்வொரு குற்றத்தையும் அவர் திமுக மீது போட்டுக்கொண்டு இருக்கிறார். அதேபோலத் தான் அண்ணா நகர் அருகே ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். கடைசியாகப் பார்த்தால் அந்த வழக்கில் அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் என்பவரே கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் குற்றம் செய்து கைதானவர்கள் அனைவருமே அதிமுகவை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
திமுக கொடியில் மாறுவேடத்தில் அதிமுக:
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திவரக்கூடிய திமுக ஆட்சியைக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு காலை முதல் இரவு வரை பொய்களைச் சொல்லியே எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு ஆட்சியின் சார்பில் திமுக சார்பிலும் அவ்வப்போது பதிலடி கொடுத்தாலும் திருந்துவது போன்று இல்லை.... ஒரு பொய்யைத் தொடர்ந்து சொன்னால் உண்மையாகிவிடும் என்ற நப்பாசையில் பேசி வருகிறார்.
தேர்தல்களில் திமுகவினர் தொடர்ந்து வென்று வரும் நிலையில், அதைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு திமுக கொடியைப் பயன்படுத்தி அதிமுகவினர் மாறுவேடத்தில் புகுந்து, இது போன்ற புதிய செயல்களைத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது. புலன் விசாரணை சீக்கிரம் முடித்து இந்த இரு கார்கள் அதிமுகவில் யாருக்குத் தொடர்பானது என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications