நேரத்தை வீணடிக்காதீர்கள்.. சமூக நீதி கூட்டமைப்பில் அதிமுக சேராது: ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடிதம்
சென்னை: சமூக நீதி கூட்டமைப்பில் அதிமுக இணைய விரும்பவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியிருந்தார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் தங்களின் பிப்ரவரி 2 ஆம் தேதி நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றது. அந்த கடிதத்தில் கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க ஒத்தக் கருத்துள்ள அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து அந்தக் கூட்டமைப்பில் அதிமுக சார்பில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள்.

ஓர் அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்தக் கருத்துகளை உடையவர்களை அழைத்துப் பேசி அதுகுறித்து விவாதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தாங்களே ஓர் அமைப்பை ஏற்படுத்திவிட்டு அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதே கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாக உள்ளது என்பது தங்களுக்கு முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டாட்சி சமூகநீதி என்றாலே மக்களின் நினைவிற்கு உடனடியாக வருவது அதிமுகவும் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் என்பதை இந்தத் தருணத்தில் எடுத்துக் கூற கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில் இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கல்வியிலும், அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பை பெறுவதிலும் அதிக பயன்பெற்று வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் 1980 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டதுதான். இது சமூகநீதிக்கான முதல் எடுத்துக்காட்டு.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு அம்மக்கள் தொகையின் அடிப்படையில் 52 சதவீதம் இருக்க வேண்டுமென மண்டல் குழு பிரதானமாக பரிந்துரைத்தும் மத்திய அரசு அலுவலகங்களிலும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்க 1990 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைப் பாராட்டி 21-08-1990 அன்று திமுக ஆட்சியில் தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் மண்டல் குழுவின் முக்கியப் பரிந்துரையான 52 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் கல்வியிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தியதோடு மண்டல்குழுவின் பரிந்துரையை முழுமையாக ஏற்காத மத்திய அரசை கண்டித்தவர் ஜெயலலிதா. இது சமூகநீதிக்கான இரண்டாவது எடுத்துக்காட்டு.
1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 67 சதவீதமாக இருப்பதால் இதர பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 27 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்று கருதிய ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக முதல்முறையாக பொறுப்பேற்ற பிறகு 30.09.1991 அன்று மத்திய அரசு, மத்திய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளிலும் கல்வி நிலையங்கள் அனுமதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றினார்கள். இது சமூக நீதிக்கான மூன்றாவது எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் 30 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் ஒரு சதவீதம் பழங்குடியினருக்கும் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்பற்றப்பட்டு வந்த நிலையில் மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பான வழக்கை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசனப் பிரிவு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து முன்னேறிய பிரிவினரை நீக்க வேண்டுமென்றும் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீத உச்சவரம்பை மீறக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்த ஜெயலலிதா அதிலிருந்து மீள்வதற்காக 04.11.1993 அன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார்கள். அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையை உறுதி செய்திட இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தக் கோரும் தீர்மானத்தை 09.11.1993 அன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றினார். இன்னும் சொல்லப்போனால் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அமைக்கப்பட்டதே அதிமுக ஆட்சிக் காலத்தின்தான். இது சமூகநீதிக்கான 4ஆவது எடுத்துக்காட்டு.
இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (கலவி நிலையங்களில் இடங்களையும் அரசின் கீழ் வருகிற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன் வடிவை 30.12.1993 அன்று தமிழக சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து 31.12.1993 அன்று ஒரு மனதாக நிறைவேற்றியதோடு, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் வரிசை எண் 257A- இல் மேற்படி சட்டத்தை சேர்த்து 69 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்பு பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. இது சமூகநீதிக்கான 5ஆவது எடுத்துக்காட்டு.
Recommended Video
மத்திய அரசில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்த போது சமூக நீதிக்காகவோ அல்லது மாநில சுயாட்சிக்காகவோ குரல் கொடுக்காமல் இருந்துவிட்டு தற்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்காத தருணத்தில் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கி அதில் அதிமுக சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. சமூக நீதி கூட்டமைப்பில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்துவிட்டு நீட் தேர்வு ரத்து போன்ற மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications