கழுதை தேய்ந்து கட்டெறும்பான தேமுதிக... வெட்டி விலக்கி விடும் முடிவில் அதிமுக!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தேமுதிக கதை முடிந்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெட்டி விடும் முடிவில் திடமாக இருக்கிறது அதிமுக.
தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல தேமுதிக இம்முறையும் திமுக, அதிமுகவுடன் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஒருகட்டத்தில் 40 தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணி என பகிரங்கமாகவே தேமுக நிபந்தனை விதித்தது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக 60, 40 என தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் தேமுதிகவும் குடைச்சல் கொடுத்து வருவதை அந்த கட்சி விரும்பவில்லை.
இதனால் தேமுதிகவை கண்டு கொள்ளாமலேயே இருந்து வருகிறது அதிமுக. சென்னையில் டிச. 27-ல் நடைபெற உள்ள அதிமுக தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கவும் தேமுதிகவை அழைக்கவும் இல்லை. இதனால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

தேமுதிகவின் 8.38% வாக்குகள்
அதிமுக இப்படி தேமுதிகவை கழற்றிவிடுவது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான். ஏனெனில் நம்பகமான கூட்டணி கட்சி என்ற நிலையையும் நிலையான வாக்கு வங்கி கொண்ட கட்சி என்ற தகுதியையும் தேமுதிக எப்போதோ இழந்துவிட்டது என்பதே கள யதார்த்தம். 2005-ம் ஆண்டு தேமுதிக கட்சி தொடங்கப்பட்டது. 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 232 தொகுதிகளில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். அப்போது தேமுதிக பெற்ற மொத்த வாக்குகள் 27,64,000. அதாவது மொத்தம் 8.38% வாக்குகளைப் பெற்றது.

எகிறிய வாக்கு சதவீதம்
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் தேமுதிக தனித்தே களம் கண்டது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. அந்த தேர்தலில் தேமுதிக மொத்தம் 31,26,000 வாக்குகளைப் பெற்றது. தேமுதிகவின் வாக்கு சதவீதம் 10.3% ஆக உயர்ந்தது. இதனால் தேமுதிக கவனிக்கத்தக்க கட்சியாக பார்க்கப்பட்டது.

தடாலடி விஸ்வரூபம்
எப்போதும் மக்களுடனும் ஆண்டவனும் கூட்டணி என்றே சொல்லி வந்த தேமுதிக 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தடாலடியாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதிமுக அணியில் 41 இடங்களை தேமுதிகவுக்கு கொடுத்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் 29 இடங்களில் தேமுதிக வென்று தமிழகத்தின் எதிர்க்கட்சி தகுதியைப் பெற்றது. திமுகவோ 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் இந்த தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவீதமானது 7.9% ஆக குறைந்தது.

சரிவில் தேமுதிக
2011 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் தேமுதிக எடுத்த குழப்பமான நிலைப்பாடுகளால் அக்கட்சியே சிதறுண்டும் போனது. அதன் வாக்கு வங்கியும் மளமளவென பெரும் சரிவை சந்தித்தது. 2014 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் போனது தேமுதிக. 14 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு அத்தனை இடங்களிலும் தோற்றது தேமுதிக. அப்போது தேமுதிக பெற்ற வாக்குகள் 20,79,000. தேமுதிகவின் வாக்கு சதவீதம் 5.1% என்ற நிலைக்கு போனது.

படுபரிதாப தேமுதிக
2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்கிற 3-வது அணியில் தேமுதிக இடம்பெற்றது. அப்போது 104 இடங்களில் தேமுதிக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவும் இல்லை. பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டையும் பறிகொடுத்தது. தேமுதிக பெற்ற வாக்குகள் 10,34,000 ஆன குறைந்தது. வாக்கு சதவீதமோ 2.39% என பெரும் சரிவை சந்தித்தது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேமுதிக நடத்திய பேர விளையாட்டு அனைத்து கட்சிகளையும் மட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்தே அந்த கட்சியை அன்னியப்பட வைத்தது. 2019 லோக்சபா தேர்தலில் திமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு அதிமுகவுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி பரமபத ஆட்டம் ஆடியது தேமுதிக. ஆனால் இந்த ஆட்டம் கடைசியில் தேமுதிகவை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியது. திமுக அசிங்கப்படுத்தி தேமுதிகவை விரட்டிவிட வேறுவழியே இல்லாமல் அதிமுகதான் தேமுதிகவுக்கு தஞ்சம் கொடுத்தது. போனால் போகட்டும் என 4 லோக்சபா தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுத்தது. வழக்கம் போல தேமுதிக அத்தனையிலும் தோல்வி அடைந்து அதன் வாக்கு சதவீதமோ வெறும் 2.19% என்ற பரிதாபத்துக்குப் போனது.

வெட்டிவிட்ட அதிமுக
இப்படி 8%, 10% வாக்குகளைப் பெற்றிருந்த தேமுதிக இப்போது வெறும் 2.1% வாக்குகளைத்தான் வைத்திருக்கிறது. அதுவும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. தேமுதிகவின் நிலைமையை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்று மட்டுமே சொல்ல முடியும். இப்படியான ஒரு சூழ்நிலையிலும் எங்களுக்கு 40 சீட் வேண்டும் என்று தேமுதிக சிரிக்காமல் கேட்டு அடம்பிடிப்பதை எந்த ஒரு கட்சியும் ஒருபோதும் ஏற்கவே ஏற்காது. ஆனாலும் வீண் ஜம்பத்துக்காகவே நாங்களும் பெரிய கட்சி என தேமுதிக வழக்கம் போல வாய்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. நீங்க இப்படியே பேசிக் கொண்டிருங்க.. நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம்... என அதிமுகவும் தேமுதிக எனும் எக்ஸ்ட்ரா லக்கேஜை தூக்கி கடாசிவிட்டு தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பிவிட்டது. அந்தோ பரிதாபம் தேமுதிக!












Click it and Unblock the Notifications