"இரட்டை இலை.." அதிமுக வைத்துள்ள சூப்பர் பிளான்.. சென்னை மாநகராட்சி வேட்பாளர் பட்டியலும் வெளியீடு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக சார்பில் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியுடன் களமிறங்கும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. இது தவிர பாமக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியாகக் களத்தில் இறங்கியுள்ளன. அதிமுக சார்பில் கடந்த 30ஆம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து நேற்று 2ஆவது மற்றும் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தச் சூழலில் இன்று அதிமுக மேலும் இரண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இன்று திருப்பூரில் 58 வார்டுகள் மற்றும் சென்னையில் 198 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சிவகாமி ரெட்டை இலை சின்னத்தில் எக்மோர் பகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி , புரட்சி பாரதம் கட்சி, சமூக சமத்துவப்படை, பாரதிய பார்வார்டு பிளாக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.












Click it and Unblock the Notifications