"எடப்பாடி படத்திற்கு பால் அபிஷேகம்.." வியக்க வைத்த தொண்டர்கள்.. ஆனால், கடைசியில் இப்படி ஆகிடுச்சே
சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஆர்வ மிகுதியில் அங்கிருந்த தொண்டர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமி படத்திற்குப் பால் ஊற்றிய சம்பவம் அரங்கேறியது.
அதிமுகவில் கடந்தாண்டு பெரிய குழப்பம் ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும்.. அதுவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இரட்டை தலைமையில் இயங்கி வந்த அதிமுக, ஒற்றை தலைமையை நோக்கி வந்தது.

இரட்டை தலைமையாக இருந்த போதே, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பிற்கு இடையே மோதல் இருந்து தான் வந்தது. ஆனால், அது அப்போது வெளிப்படையாகத் தெரியவில்லை.
அதிமுக: ஒற்றை தலைமை என்ற பேச்சு வந்ததும் இரு தரப்பு மோதல் வெளிப்படையானது. எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராக முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்ட நிலையில், எடப்பாடியைத் தலைமை பொறுப்பிற்குக் கொண்டு வருவது மற்றும் ஓபிஎஸை நீக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், ஓபிஎஸ் தரப்பு இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது. இதில் சென்னை ஐகோர்ட், உச்ச நீதிமன்றம் என அனைத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வந்தன. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது அங்கீகரிக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் மெகா அதிமுக மாநாடு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பால் அபிஷேகம்: இந்தச் சூழலில் தான் இன்று ஏப்ரல் 20ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே இன்றைய தான் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்தச் சூழலில் ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். இதனால் தலைமை அலுவலகத்தில் ஏகப்பட்ட தொண்டர்கள் கூடியிருந்தனர். அங்கே வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஆர்வ மிகுதியில் சில தொண்டர்கள் அங்கே அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி படத்திற்கு சினிமா ரசிகர்கள் செய்வது போல அதிமுக தொண்டர்கள் பால் ஊற்றிய அபிஷேகம் செய்தனர்.
சுத்தம் செய்த தொண்டர்கள்: "கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி" என்றும் "நாளைய முதல்வர் எடப்பாடி" என்று கோஷமிட்ட அதிமுக தொண்டர்கள், அங்கே இருந்த எடப்பாடி பழனிசாமி படத்திற்குப் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இருப்பினும், இந்த செயலாளர் பல லிட்டர் பால் வீணாக வீணடிக்கப்பட்டது. பால் அபிஷேகத்தால் வீணாக்கப்பட்ட பால் நுழைவாயிலில் தேங்கிக் கிடந்த நிலையில், தொண்டர்களை வைத்தே சுத்தம் செய்யப்பட்டது! இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகிவிட்டாலும் சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் உள்ள வழக்குகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications