அடையாறு நதி சீரமைப்பு.. ஒரே திட்டம் 3வது ஆண்டாக பட்ஜெட்டில் அறிவிப்பு.. எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சென்னை: சென்னை அடையாறு நதி சீரமைப்பு தொடர்பாக 1500 கோடி ரூபாய் திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதேபோல் அடுத்தததாக 2024ம் ஆண்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட்டில் அடையாறு நதி சீரமைப்பு தொடர்பாக 1500 கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்ததார். இப்போது 2025ம் ஆண்டு பட்ஜெட்டிலும் அடையாறு நதி சீரமைப்பு தொடர்பாக 1500 கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்துள்ளார். ஒரே திட்டத்தை மூன்றாவது ஆண்டாக அறிவித்திருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
சிங்காரச் சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறு சீரமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதன்படி, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக பட்ஜெட்டில் அறிவித்து வருகிறது. கடந்த 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதிநிலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் அடையாறு நதி சீரமைப்பு திட்டத்தை 2024-25 பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடை பாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள், தரமான அருந்தகங்கள் போன்ற கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும். இத்திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ 1500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இதனிடையே தமிழக அரசு கடந்த ஆண்டு அறிக்கை ஒன்றும் வெளியிட்டது. அந்த அறிக்கையில், "அடையாறு நதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.555.46 கோடி நிர்வாக அனுமதி வழங்கி, முக்கிய பணிகளான கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு அகற்றுதல், நதியின் வெள்ளநீர்கொள்ளளவை மேம்படுத்துதல், மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கான பணிகள், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரித்தல் மற்றும் நதியின் கரையோர மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இச்சீரமைப்பு பணிகள் தொடர்புடைய சார்துறைகளால் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சீரமைப்பு பணிகள் மார்ச் 2024ல் முடிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டது.

இந்நிலையில் 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அப்போதும் அடையாறு சீரமைப்பிற்காக 1500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். இதுபற்றி அவர் பேசும் போது.நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பசுமையான வாழ்விட சூழலை உருவாக்கும் பொருட்டு, அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுற சீரமைக்கும் திட்டம் 1500 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஒரே திட்டத்தை தமிழக அரசு மூன்று ஆண்டுகளாக அறிவித்துள்ளது பற்றி அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றன. இதுபற்றி அரசு விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை நிலை என்ன என்பது தெரியவரும். இதனிடையே அடையாறு நிதி சீரமைப்பு குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழக பட்ஜெட்டில் அறிவித்தது போன்று 1500 கோடி ரூபாய் செலவில் அடையாறு ஆற்றை மேம்படுத்தினால், லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போன்று மாற்றம் பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications