12 மணிநேரம்.. விழா முடிவில் ‛ரஞ்சிதமே’ ஸ்டைலில் முத்தம்.. மாணவர்களை நெகிழ வைத்த நடிகர் விஜய்! செம
சென்னை: நடந்து முடிந்த 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவ-மாணவிகளை நேற்று நடிகர் விஜய் சந்தித்து பாராட்டினார். மேலும் உதவித்தொகையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 12 மணிநேரம் நடந்த நிலையில் நடிகர் விஜய் ட்விஸ்ட் வைத்து மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தை நெகிழ வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். ரத்த தானம் முகாம், பசியால் வாடுவோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாண-மாணவிகளை சந்திக்க நடிகர் விஜய் முடிவு செய்தார். இந்த சந்திப்பின்போது மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக விபரங்கள் சேகரிக்கப்பட்டன. ஒவ்வொரு தொகுதியிலும் 10, 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை சென்னையில் இன்று நடிகர் விஜய் சந்தித்தார். சென்னை நீலாங்கரையில் கல்வி விருது வழங்கும் விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரவு 9 மணியைத் தாண்டி 11 மணியை கடந்தும் நிகழ்ச்சி நடந்தது.
ஒவ்வொரு மாணவ-மாணவிகளையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு சால்வை போர்த்தி பாராட்டு சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கி அவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டார். இந்த வேளையில் மாணவ-மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேசியதோடு, மாணவ-மாணவிகளும் விஜய்க்கு பரிசுகள், கவிதைகளை பரிசளித்தனர்.
இறுதியாக சுமார் 12 மணிநேரத்துக்கு பிறகு நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் முடிவில் நடிகர் விஜய் ‛ரஞ்சிதமே' பாடலில் வருவது போல் முத்தம் கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்தார். இதனை பார்த்த மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரித்தனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்காக அறுசுவை உணவுடன் சைவ உணவு பரிமாறப்பட்டது. நடிகர் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவ-மாணவிகளை சந்தித்து பாராட்டி உதவித்தொகை வழங்கி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நேற்றைய விழாவில் மட்டும் மொத்தம் 1400 பேரை நடிகர் விஜய் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு விஜயின் இந்த செயலை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.
*******












Click it and Unblock the Notifications