ஆம் ஆத்மி, டிஆர்எஸ் ஆட்சிகளை வீழ்த்திய பாஜகவின் "மதுபான ஊழல் ஆயுதம்"- தாக்குபிடிக்குமா திமுக அரசு?
சென்னை: தெலுங்கானாவில் டிஆர்எஸ் (பிஆர்எஸ்) ஆட்சி மற்றும் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிகளுக்கு எதிராக மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தை கையில் எடுத்து அந்த அரசுகளை தோல்வியடையச் செய்தது மத்தியில் ஆளும் பாஜக. தற்போது அதே பாணியில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக 'டாஸ்மாக் மதுபான ஊழல்" முறைகேடு ஆயுதத்தை களமிறக்கி இருக்கிறது பாஜக. டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு.
மத்தியில் ஆட்சியைப் பிடித்த பாஜகவால் தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாமல் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சிதான் டெல்லியை ஆட்சி செய்து வந்தது.

டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான ஆயுதம்
டெல்லி ஆம் ஆத்மி அரசு என்பது ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து உருவானது. ஆனால் அதே ஆம் ஆத்மி ஆட்சிக்கு எதிராக அதன் ஊழலையே ஆயுதமாக கையில் எடுத்தது பாஜக. டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியின் சர்ச்சைக்குரிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி அமலாக்கத்துறை, சிபிஐ களமிறங்கின. டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவில் தொடங்கிய இந்த கைது படலம் கடைசியாக டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வரை நீடித்தது.
இந்த கைது வரிசையில் தெலுங்கானா முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சியுமான கவிதாவும் சிக்கி சிறைவாசம் அனுபவித்தார்.
டெல்லி ஆட்சியை வீழ்த்திய மதுபான ஊழல்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தை அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை உயிர்ப்புடன் வைத்திருந்தன. இதனால் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி, ஊழல் ஆட்சி என்ற இமேஜும் இடைவிடாமல் நிலைநிறுத்தப்பட்டே வந்தது. இதுதான் தெலுங்கானாவில் டிஆர்எஸ் ஆட்சியை இழக்க ஒரு காரணமாக இருந்தது ; டெல்லியில் ஆம் ஆத்மி 10 ஆண்டுகால ஆட்சியை பறிகொடுக்கவும் முதன்மை காரணமாக இருந்தது.
டாஸ்மாக் ஊழல் - அமலாக்கத்துறை ரெய்டு
இதே ஆயுதத்தையே தற்போது மத்திய அரசுக்கு படுசிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கு எதிராக கையில் எடுக்கிறது பாஜக. இதன் முன்னோட்டமாக தமிழ்நாட்டில் மதுபான நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
TN CM Thiru @mkstalin was spreading his delusional fears to divert people's attention from the Enforcement Directorate raid happening in TASMAC, the Liquor Minister, and the liquor-supplying companies in Tamil Nadu.
— K.Annamalai (@annamalai_k) March 13, 2025
The ED has uncovered documents from the distilleries linked to… pic.twitter.com/wkZ0XQPPzE
டாஸ்மாக் மூலம் ரூ1,000 கோடி ஊழல்- அமலாக்கத்துறை
இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிக்கையில், டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் மூலம் அரசுக்கு ரூ1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதுபான பார்கள் டெண்டர்கள், மதுபானங்கள் கொள்முதல், மதுபானங்கள் விற்பனை என அனைத்திலும் அதீத முறைகேடுகள் மூலம் ரூ1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கிறது அமலாக்கத்துறை.
தமிழகத்தில் தாக்கம் ஏற்படுமா? திமுக தாங்குமா?
அமலாக்கத்துறையின் இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அடுத்த 2 நாட்களில் திமுக அரசுக்கு எதிராக- டாஸ்மாக் மதுபான ஊழல் முறைக்கேட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் திமுக அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது பாஜக அல்ல. அதிமுகதான். ஆனால் பாஜகவும் அதிமுகவும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கின்றன. அண்ணா திமுகவும் திமுகவுக்கு எதிராக காத்திரமான போராட்டங்களை நடத்தியதும் இல்லை; பாஜகவால் திமுகவுக்கு எதிராக அதிமுக அளவுக்கு வலிமையான போராட்டங்களை நடத்தக் கூடிய வலிமையும் இல்லை; திமுக தரப்பிலோ காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்த வலிமையான கூட்டணி இருக்கிறது. இதனால் திமுக அரசுக்கு எதிரான டாஸ்மாக் எனப்படும் மதுபான ஊழல் ஆயுதம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது கேள்வி. மற்றொன்று மத்திய அரசுடன் மும்மொழிக் கொள்கை, நிதி மறுப்பு உள்ளிட்ட விவகாரங்களுடன் முழுவீச்சில் மோதி வருகிறது திமுக அரசு. இதற்கு பழிவாங்கவே இத்தகைய ஊழல் குற்றச்சாட்டை பாஜக அரசு முன்வைக்கிறது என திமுக தரப்பும் எளிதாக கடந்து செல்லவும் வாய்ப்பிருக்கிறது.. இருப்பினும் ஆட்சிகளைக் கவிழ்த்த மதுபான ஊழல் ஆயுதம் வீசப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அரங்கேறப் போகும் அல்லது நிகழப் போகும் அதிர்வுகள் கவனத்துக்குரியதாக உருவெடுக்கின்றன.












Click it and Unblock the Notifications