"சக்சஸ்.." பெரும் டென்ஷன் தவிர்ப்பு.. பரந்தூர் விமான நிலைய போராட்டம் தற்காலிக வாபஸ்: போராட்ட குழு
சென்னை: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் அமைச்சர்கள் அன்பரசன், எ.வ.வேலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின்னர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ளபரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசும் நிலம் கையகப்படுத்துவதற்காக கருத்துக் கேட்புக் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.
சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள விமான நிலையத்திற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது.

தொழில் வளர்ச்சி முடங்கும்
பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் 2028ம் ஆண்டுக்குள் அமையாவிட்டால் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி முடங்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதேபோல் அமைச்சர் எ.வ.வேலு, விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மூன்றரை மடங்கு அதிக இழப்பீடு வழங்கப்படும், மாற்று நிலம் வழங்கப்படும் மற்றும் புதிதாக வீடு கட்ட நிதியுதவி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

12 கிராமங்கள்
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரண்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கம்மாபுரம், சிங்கில்பாடி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

மக்கள் போராட்டம்
இந்த விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரத்தில் 80 நாட்களை கடந்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அந்தக் கிராமங்களுக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வேறு சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளே நுழைய காவல்துறை அனுமதிப்பதில்லை. ஆனாலும் மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவளித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்கள் அன்பரசன், தங்கம் தென்னரசு மற்றும் எ.வ.வேலு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications