எஸ்.பி வேலுமணி கனெக்சன்.. அதிமுக அதிகாரபூர்வ நாளேடான "நமது அம்மா" அலுவலகத்திலும்.. அதிரடி ரெய்டு!
சென்னை: எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வரும் நிலையில் அதிமுக அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 52 இடங்களில் இன்று அதிகாலையில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. காலை 6 மணிக்கு தொடங்கிய ரெய்டு விடாமல் நடந்து வருகிறது.
இந்த ரெய்டில் எஸ்.பி வேலுமணியின் ஆடிட்டர், வேலுமணியின் நண்பர்கள், அவரின் கட்டுமான நிறுவனங்கள், மற்ற தனியார் நிறுவனங்கள், சில கடைகள், அதன் ஒப்பந்ததாரர்கள், முன்னாள் அதிகாரிகள் என்று பலர் குறிவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

சோதனை
வேலுமணியின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகளை தொடர்ந்து மொத்தம் 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர்கள்தான் இந்த வழக்கில் மிக முக்கியமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் A4 மற்றும் A5 என்று இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்கள்.

விசாரணை
அதோடு இவர்களின் கேசிபி நிறுவனம் ஏ3 ஆக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே நமது அம்மா நாளேடு அலுவலகத்தில் ரெய்டு நடந்து வருகிறது. இதன் வெளியீட்டாளராக சந்திரசேகர் இருந்து வருகிறார். இது தற்போது எஸ்.பி வேலுமணியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

நமது அம்மா
எஸ்.பி வேலுமணி சந்திரசேகர் மூலம் நமது அம்மா நாளேட்டை நடத்தி வருவதால் அதன் அலுவலகத்திலும் தற்போது ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று எஸ்.பி வேலுமணிக்கு எதிராக கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்ற காண்டிராக்டர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் சந்திரசேகருக்கும் எதிராக மிரட்டல் புகார் அளித்து இருந்தார். இதையடுத்தே தற்போது சந்திரசேகர் குறி வைக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

நமது எம்ஜிஆர்
முன்னதாக அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடாக நமது எம்ஜிஆர் இருந்தது. ஆனால் சசிகலா பிரிந்த போது, இந்த நாளேடும் சசிகலா வசம் சென்றது. இதனால் அதிமுக சார்பாக புதிதாக நமது அம்மா நாளேடு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ளது.












Click it and Unblock the Notifications