இஞ்ச் கூட நகரல.. “ஜாம்” ஆன சென்னை வரும் சாலைகள்! தீபாவளி முடிந்து கொத்தாக வந்த வெளி மாவட்டத்தினர்
சென்னை: தீபாவளி பண்டிகை முடித்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு நேற்று இரவு மக்கள் அதிகளவில் திரும்பியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களில், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெருநகரங்களில் படிப்பு, பணி நிமித்தமாக தங்கி இருக்கும் மக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்வது வழக்கம். கடும் நெரிசலுக்கு மத்தியில் அடித்து பிடித்துக் கொண்டு பேருந்துகள், ரயில்களில் இவர்கள் சென்று பண்டிகையை கொண்டாடினர். இவர்களின் வசதிக்காக ஏராளமான பண்டிகைகால அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்கியது.

இப்படி தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து மட்டுமே சுமார் 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று மாலை முதலே சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு மக்கள் புறப்படத் தொடங்கினர். இதற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. நேற்று மட்டும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 2,100 வழக்கமான பேருந்துகளும், 3,167 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதேபோல் பிற மாவட்டங்களுக்கு இடையே 3,825 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த பேருந்துகளில் செல்வதற்காக ஏராளமான பயணிகள் பேருந்து நிலையங்களில் குவிந்தனர். திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர், சேலம், நெல்லை, தூத்துக்குடி, தேனி, கடலூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளின் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்து மட்டுமின்றி கார் போன்ற தனி வாகனங்களிலும் ஏராளமான மக்கள் புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக பிரதான நகரங்களை நோக்கி செல்லும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக மதுரை, நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் திரும்பி உள்ளனர். இதன் காரணமாக நேற்று மாலையில் இருந்தே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக விழுப்புரம் பைபாஸ் சாலையில் இருந்து சென்னை வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றன. பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல் தனி வாகனங்களில் பலர் வருவதாலேயே இத்தகைய வாகன நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அதேபோல் வாகன நெரிசலை குறைக்க கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கூடுதல் பாதைகளில் வாகனங்கள் செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications