தமிழக அமைச்சரவையில் ஸ்ட்ரெய்ட்டாக டாப் 10ல் இடம்பிடித்த உதயநிதி..தங்கம் தென்னரசுக்கு அடுத்த இடம்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இன்று பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சரவையில் ஸ்ட்ரெட்டாக டாப் 10ல் இடம் கிடைத்துள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்ததாகவும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு 17 இடங்கள் முன்னதாகவும் உதயநிதி ஸ்டாலின் அங்கம் வகிக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கைப்பற்றி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த காலக்கட்டத்தில் அமைச்சரவையில் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டன. அதாவது அமைச்சர்களின் துறைகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது.
மாறாக அமைச்சரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரான உதயநிதி
அதன்படி உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலின் அறையின் வாயிலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற பெயர் பலகை பொருத்தப்பட்டு உள்ளது.

அமைச்சரவையில் 10வது இடம்
முன்னதாக உதயநிதிக்கு ஒதுக்கப்பட்ட இந்த துறையை அமைச்சர் மெய்யநாதன் நிர்வகித்தார். தற்போது அவரிடம் இருந்து அந்த துறை பறிக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. மெய்யநாதன் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை அமைச்சராக தற்போது தொடர்கிறார். இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சரவையில் 10வது இடம் கிடைத்துள்ளது.

சீனியாரிட்டி பட்டியல்
அதாவது ஒவ்வொரு மாநிலம் மற்றும் மத்திய அமைச்சரவையில் சீனியாரிட்டி அடிப்படையில் அமைச்சர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். அதன்படி இன்று தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தான் உதயநிதி ஸ்டாலின் ஸ்ரேட்டாக 10வது இடத்தை பிடித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட 35 பேர் கொண்ட பட்டியலில் உதயநிதி 10வது இடத்தில் உள்ளார். அதன் விபரம் வருமாறு:

முதல் 9 இடம் யாருக்கு?
இந்த பட்டியலில் முதலமைச்சர் என்ற முறையில் ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன், 3வது இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, 4வது இடத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, 5வது இடத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 6வது இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு, 7 வது இடத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், 8 வது இடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், 9வது இடத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர். இவர்களை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி 10வது இடத்தில் உள்ளார்.

கீதாஜீவன் - சக்கரபாணி
11வது இடத்தில் சட்ட அமைச்சர் எஸ் ரகுபதி, 12வது இடத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, 13வது இடத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், 14வது இடத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தாமோ அன்பரசன், 15வது இடத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், 16வது இடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், 17 வது இடத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 18 வது இடத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆர்எஸ் ராஜகண்ணப்பன், 19 வது இடத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், 20 வது இடத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளனர்.

செந்தில்பாலாஜி-சேகர்பாபு
21வது இடத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 22வது இடத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, 23வது இடத்தில் மருத்துவம் மற்றுமு் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 24வது இடத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, 25 வது இடத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், 26வது இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளார்.

பிடிஆர்-அன்பில் மகேஷ்
27 வது இடத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 28 வது இடத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், 29 வது இடத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், 30வது இடத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 31வது இடத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், 32வது இடத்தில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன், 33 வது இடத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், 34வது இடத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், 35வது அதாவது கடைசி இடத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications