விஜய்க்கு வந்த திடீர் பயம்.. தவெக வேட்பாளர்களுக்கு மேஜர் உத்தரவு.. அச்சுறுத்தும் குதிரை பேர அரசியல்!
சென்னை: ''சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனடியாக பனையூருக்கு வர வேண்டும். எந்த நேரமானாலும் பனையூருக்கு வந்துவிட வேண்டும்'' என விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நேற்று 'எக்ஸிட் போல்' எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின.

தமிழகத்தை மையமாக வைத்து மொத்தம் 10 கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் 6 கருத்து கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவும், 3 கருத்து கணிப்புகள் அதிமுகவுக்கு சாதகமாகவும், 'ஆக்ஸிஸ் மை இந்தியா' கருத்து கணிப்புகள் விஜய்யின் தவெகவிற்கு சாதகமாக வந்துள்ளது.
எக்ஸிட் போலால் விஜய் நம்பிக்கை
இந்த 'ஆக்சிஸ் மை இந்தியா' கருத்து கணிப்பின்படி தமிழக வெற்றிக் கழகம் 98 - 120 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேட்ரிஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தவெகவுக்கு 13 முதல் 18 இடங்கள், என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பில் தவெகவுக்கு 18 - 24 இடங்கள், ஜேவிசி - டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தவெக 8 - 15 இடங்களைக் கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுடன் ஆலோசனை
இந்த கருத்து கணிப்புகளால் விஜய் உற்சாகமாகி உள்ளார். இதனால் சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சமயத்தில் பல்வேறு முக்கிய அறிவுரைகளை வேட்பாளர்களுக்கு விஜய் வழங்கினார்.
அதன்படி, ''வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களிலேயே இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியாக ஏதேனும் நடந்தால் உடனடியாக தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எக்ஸிட் போல் முடிவுகள் நமக்கு நம்பிக்கை தருகின்றன. நம்பிக்கையுடன் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருங்கள். முடிவுகள் நமக்கு சாதகமாக தான் வரும்.
பனையூர் வர வேண்டும்
அனைவரும் வெல்வோம் என்று நம்பிக்கை உள்ளது. இதுவரை, அனைவரும் நன்றாக பணியாற்றி உள்ளீர்கள். இனியும் மிகவும் கவனாக இருக்க வேண்டும். பல தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனால் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றிப்பெறும் வேட்பாளர் உடனடியாக பனையூருக்கு வர வேண்டும். இரவு எந்த நேரமானலும் பனையூருக்கு வந்துவிட வேண்டும். மே 4ம் தேதி உங்களுக்காக காத்திருப்பேன். பனையூரை தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது. பனையூருக்க மட்டும் வர வேண்டும்'' என கூறியுள்ளார்.
குதிரை பேர அரசியல் பயம்
விஜய்யின் இந்த உத்தரவின் பின்னணியில் குதிரை பேரத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை அரசியல் கட்சியினர் இழுக்கலாம் என்ற அச்சம் உள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியின் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் அதன் பின்னணியில் குதிரை பேர அரசியல் இருக்கலாம் என்ற சந்தேகம் தவெகவினரிடம் உள்ளது.
இதனால் ஒருவேளை மாநிலத்தில் தொங்கு சட்டசபை வந்தால் தனது எம்எல்ஏக்களை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியினர் குதிரை பேரம் நடத்தி கவர்ந்து விடுவார்களா? என்ற அச்சம் விஜய்க்கு உள்ளது. எனவே தான் வென்றவுடன் வேட்பாளர்கள் பனையூருக்கு வந்துவிட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முகாமில் பெரும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
குதிரை பேரம் என்பது என்ன?
நம் நாட்டில் குதிரை பேர அரசியல் ஒன்றும் புதிதல்ல. கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் இந்த அரசியல் மிகவும் பிரபலம். அதாவது ஆட்சியை பிடிக்க ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களின் பணபலத்தை பயன்படுத்துவார்கள். இந்த பணத்தை வைத்து பிற கட்சிகளின் எம்எல்ஏக்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றுவார்கள்.
இதுதான் குதிரை பேரம். அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் தமிழகத்தில் தவெக கணிசமான இடங்களில் வென்று தொங்கு சட்டசபை அமைந்தால் விஜய்யின் ஆதரவு இருந்தால் தான் ஆட்சியை பிடிக்கும் நிலை வரும். இந்த சமயத்தில் குதிரை பேர அரசியல் தலைதூக்கலா் என்பதால் விஜய் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications