மீண்டும் ED ரெய்டு.. 3 மாதங்களுக்கு முன்பு சிக்கிய செந்தில் பாலாஜி.. ஜூன் 14ஆம் தேதி நடந்தது என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகும் நிலையில், மீண்டும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. கடந்த முறை ரெய்டின் போது நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்..
அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை வரும் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் ஒருவரின் இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடக்கிறது. கோவை, கரூர், நாமக்கல். திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே மூன்று முறை சோதனை நடந்த நிலையில் மீண்டும் சோதனை நடந்து வருகிறது.
ஜூன் 13ஆம் தேதி நடந்தது என்ன?: கடந்த ஜூன் 13ஆம் தேதி காலை 9 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர். அப்போது, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ரெய்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு 'பொறுத்திருந்து பார்ப்போம்' என பதில் அளித்தார்.
காலை 9.15 மணியளவில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தொடர்புடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடியாக சோதனை நடந்தது.
செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி: இதையடுத்து புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ரெய்டுக்கு கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு சரத் பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அமலாக்கத்துறை ரெய்டு தொடர்ந்து நள்ளிரவு வரை நடைபெற்று வந்தது. ஜூன் 14 நள்ளிரவு 2 மணியளவில் தலைமைச் செயலகத்தில் சோதனை நிறைவடைந்த நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை காரில் அழைத்துச் சென்றனர். அப்போது முகத்தை மூடியபடி நெஞ்சை பிடித்துக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கதறி அழுதார்.
ஸ்டாலின் எதிர்ப்பு: அதைத்தொடர்ந்து நள்ளிரவு 2.15 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நள்ளிரவு 2.30 மணிக்கு செந்தில் பாலாஜியை பார்க்க திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ சென்றார். ஆனால் அப்போது அவரை பார்ப்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. நள்ளிரவு 2.45 மணிக்கு உதயநிதி ஸ்டாலின், ரகுபதி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்றனர்.
காலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜியை பார்த்தார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின்அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை: சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உயர் ரத்த அழுத்தம், இசிஜியில் ஏற்பட்ட மாறுதல்களைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஓமந்தூரார் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிகையில், "47 வயதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காலை 10.40 மணியளவில் இருதய ரத்த நாள பரிசோதனை செய்யப்பட்டது. அப்பரிசோதனையில், 3 முக்கியமான ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இஎஸ்ஐ மருத்துவர்களும் செந்தில் பாலாஜி உடல் நிலையை பரிசோதித்து அதனை உறுதி செய்தனர்.
அன்று பிற்பகலிலேயே செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வந்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஜூன் 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி அல்லி. இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவை தாக்கல் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications