‛நெருங்கவே முடியாது’.. சென்னை வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு.. 22,000 போலீஸ் குவிப்பு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.2,467 கோடி மதிப்பிலான புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்க உள்ளார். மேலும் பல்வேறு திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் நிலையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று சென்னை வருகிறார். மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பிரதமர் மோடியை வரவேற்க உள்ளனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கிறார். அதன்பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சென்னை-கோவை 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து திறந்து வைக்க உள்ளார்.

மேலும் தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 2 வழித்தட பயணிகள் ரயில் 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரயில்பாதை திட்டத்தை திறந்து வைக்கிறார். இதுதவிர மதுரை-செட்டிகுளம் உயர்மட்ட பாலம், நத்தம்-துவரங்குறிச்சி 4 வழிச்சாலையை பிரமதர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இதுதவிர மேலும் சில நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணியில் இன்று 22 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை சுற்றி இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சந்தேகப்படும் படியான நபர்கள் யாரெனும் உள்ளனரா? என நேற்று இரவு தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர்.












Click it and Unblock the Notifications