நான் கோபமா கிளம்புறேன்.. வெளியேறிய எடப்பாடி! ஆணி அடித்தாற்போல் அமர்ந்த வேலுமணி & கோ! உடைந்த அதிமுக?
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சம்பவம் அதிமுகவில் இன்னும் ஒற்றுமை ஏற்படவில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சிலர் அவையில் தொடர்ந்து அமர்ந்திருந்தது 'கரங்கள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை" என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் அவை கூடியது. கூட்டம் தொடங்கியதும் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவு சம்பவம் குறித்து தொழிற்துறை அமைச்சர் முகம்மது பர்வேஷ் விதி 110-ன் கீழ் விளக்கம் அளிக்க எழுந்தார்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதலில் தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அமைச்சர் பேசுவதற்கு முன்பாக விவாதிக்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சம்மதிக்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமைச்சர் தனது விளக்க உரையைத் தொடர்ந்தார். அதன்பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வழக்கமான எதிர்க்கட்சி போராட்டமாக இது பார்க்கப்பட்டாலும், அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை என்பதுதான் அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன், லீமாரோஸ் உள்ளிட்டோர் அவையில் தொடர்ந்து அமர்ந்திருந்தனர். இது சாதாரண சம்பவமா அல்லது கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாட்டின் வெளிப்பாடா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தேர்தலில் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாததோடு, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இதனால் அதிமுகவில் மோதல் வெடித்து இரு தரப்பாக எம்.எல்.ஏ.க்கள் பிரிந்தனர். அந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து சில எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எஸ்.பி. வேலுமணி ஈடுபட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின. பின்னர் அந்த முயற்சி வெற்றிபெறாத நிலையில் மீண்டும் தலைமையுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்தனர்.
எனினும், கட்சிக்குள் ஏற்பட்ட விரிசல்கள் முழுமையாக சரியாகிவிட்டனவா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் வேலுமணிக்கு எதிராக சில தொண்டர்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பவங்களும் பேசப்பட்டன. குறிப்பாக பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவரை நோக்கி கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தான் சட்டடபையில் இன்று நடைபெற்ற வெளிநடப்பு சம்பவம் பல்வேறு கேள்விகளை உருவாக்கியுள்ளது. கட்சி எடுத்த முடிவை முழுமையாக பின்பற்றாமல் சில மூத்த தலைவர்கள் அவையில் தொடர்ந்து அமர்ந்திருந்தது பல்வேறு யூகங்களை கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications