விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் போட்ட போஸ்ட்.. வந்தாச்சு பஞ்சாயத்து! இதில் கூட உள்கூத்தா? கடுப்பான ரசிகர்கள்
சென்னை: தமிழக அரசியலில் இன்று முதலமைச்சராக அமர்ந்திருக்கும் விஜய், சினிமா உலகில் இன்னும் "தளபதி" என்ற பெயரிலேயே பெரும்பாலான ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆனால் நடிகர் விஜய், முதலமைச்சர் விஜய் என்று இரண்டு அடையாளங்களும் இப்போது ஒரே நேரத்தில் பேசப்படும் சூழல் உருவாகி விட்டது. அதற்குள் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ஒரு பிறந்தநாள் பதிவு சமூக வலைதளத்தில் புதுப் பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறது.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. "Wishing the man whose exceptional talent and unforgettable films have entertained and captivated millions, Happy Birthday Thalapathy Vijay" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியே பார்த்தால் இது ஒரு சாதாரண வாழ்த்து பதிவு மாதிரி தான் தெரியும். ஆனால் சமூக வலைதளத்தில் சில ரசிகர்களும் நெட்டிசன்களும் பிடித்துக் கொண்டிருப்பது வேறு விஷயம்.

முதல்வர் மட்டும் ஏன் இல்லை?
அந்த போஸ்டில் விஜயின் திரைப்பயணத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆரம்பகால படங்களிலிருந்து கடைசியாக அவர் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் பல ஷேட்ஸ்களை நினைவூட்டும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதாவது, இது வெறும் ஒரு ஸ்டில் போஸ்டர் அல்ல; நடிகர் விஜயின் முழு திரைப்பயணத்தையும் ஒரே ஃப்ரேமில் அடக்கிப் பார்க்கும் முயற்சி போலவே அமைந்திருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில், ஒரு கேள்விதான் விவாதமாக மாறி இருக்கிறது. "இன்று அவர் சாதாரண நடிகர் விஜய் இல்லை... தமிழகத்தின் முதலமைச்சர். அப்படியிருக்க, ஏன் சன் பிக்சர்ஸ் பதிவில் 'CM Vijay' அல்லது 'Honourable Chief Minister Vijay' போன்ற எந்த குறிப்பிடுதலும் இல்லை? ஏன் 'Thalapathy Vijay' என்ற பழைய சினிமா அடையாளத்திலேயே நிறுத்திவிட்டார்கள்?" என்பதுதான் அந்த கேள்வி.
இதைத்தான் சிலர் நேராக விமர்சனமாக மாற்றியிருக்கிறார்கள். "நடிகராக இருந்தபோது தளபதி... சரி. ஆனால் இன்று அவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். அதைக் கூட ஏற்றுக்கொள்ள மனசில்லைனா?" என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர், "சன் நிறுவனத்துக்கு விஜய் மீது இவ்வளவு பொறாமையா? முதல்வராக மாறிய பிறகும் அவரை நடிகர் விஜயாகத்தான் பார்க்கிறீங்களா?" என்று கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ரசிகர்களின் கேள்வி
சோசியல் மீடியாவில் இதற்குப் பிறகு வந்த ரியாக்ஷன்கள்தான் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சிலர், "விஜய்யை வைத்து சன் நிறுவனம் ஏற்கனவே பல ஆண்டுகளாக பிசினஸ் செய்தது. அந்த பழைய நட்பு, பழைய தொழில் மரியாதைக்காகத்தான் இந்தப் பதிவு" என்று சொல்லி வருகின்றனர்.
ஏனெனில் விஜய் - சன் பிக்சர்ஸ் இணைப்பு தமிழ் சினிமாவில் புதுசல்ல. அவர்களுடன் நேரடி தயாரிப்பு தொடர்புகள் குறைவாக இருந்தாலும், சன் நெட்வொர்க் வட்டாரத்தில் விஜய் என்ற பெயர் எப்போதும் பெரிய மார்க்கெட் பெயராகவே இருந்து வந்தது.
ஆனால் மற்றொரு தரப்பு இதை வேறு விதமாகப் பார்க்கிறது. "விஜய் இப்போது எங்கு பெயர் வந்தாலும் ட்ரெண்ட் ஆகிறார். பிறந்தநாள் என்றாலே சமூக வலைதள ரீச் வேற லெவல். அதனால் இந்த போஸ்ட் விஜய்க்கு மரியாதை காட்டுவதற்கும் மேலாக, ரீச் மற்றும் எங்கேஜ்மெண்ட் கணக்கில் போடப்பட்ட ஒரு போஸ்ட்" என்றே சிலர் பேசுகிறார்கள். அதாவது, "வாழ்த்து போட்டது உண்மைதான்... ஆனா அந்த வாழ்த்திலும் கணக்கு இருக்கிறது" என்பதே அந்த விமர்சனத்தின் மையம்.
விஜயின் இரண்டு முகங்கள்
இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரசிகர்கள் இப்போது விஜயை வெறும் நடிகராக பார்க்கும் நிலையை கடந்துவிட்டார்கள். அவர் நடித்த படங்களை நினைவுகூர்ந்தாலும், அதற்கு பின்னால் இன்று அவருடைய அரசியல் அடையாளம் நிழலாகவே இருக்கும். அதனால் தான் சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனம் வெளியிடும் ஒரு சாதாரண வாழ்த்து பதிவிலும் கூட, "அவர்கள் விஜயை எந்த அடையாளத்தில் பார்க்கிறார்கள்?" என்ற கேள்வி எழுகிறது.

சினிமா விஜய்யை மட்டும் நினைவு கூர்ந்ததா சன்?
சன் பிக்சர்ஸ் பதிவின் காட்சி அமைப்பைப் பார்த்த ரசிகர்கள், இது விஜயின் முழு சினிமா பயணத்துக்கும் ஒரு வணக்கம் போல இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆரம்பகால விஜயிலிருந்து, மாஸ் ஹீரோ விஜய், பின்னர் அரசியல் சாயல் கொண்ட கதாபாத்திரங்கள், கடைசியில் 'ஜனநாயகம்' வரையிலான ரெஃபரன்ஸ்கள் - எல்லாமே அந்த போஸ்டரின் உள்ளே மறைந்திருப்பதாக பலர் விவாதிக்கிறார்கள்.
அதாவது, சன் பிக்சர்ஸ் இந்தப் பதிவின் மூலம் "முதல்வர் விஜய்க்கு வாழ்த்து" சொல்லவில்லை; "திரை உலகை பல வருடங்கள் ஆட்சி செய்த தளபதி விஜய்க்கு வாழ்த்து" சொல்லியிருக்கிறது என்ற கமெண்டுகளும் இருக்கிறது.
ஆனால் அதுதான் ரசிகர்களில் இன்னொரு பகுதியை கோபப்படுத்துகிறது. "இன்று அவரை சினிமா விஜய்யாக மட்டும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர் முதலமைச்சராகி விட்டார். அதை சொல்லாமல் விடுவது தற்செயலா? இல்ல திட்டமிட்ட தவிர்ப்பா?" என்ற கேள்வி அங்கேயே வந்து நிற்கிறது.
மொத்தத்தில் சன் பிக்சர்ஸ் போட்டது ஒரு birthday post தான். ஆனால் அது விஜயின் பெயரை மட்டும் சொல்லி, அவரது தற்போதைய அரசியல் அடையாளத்தைத் தவிர்த்ததா என்ற சந்தேகம் சமூக வலைதளத்தில் ஒரு பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. ஒருபுறம் "பழைய நட்புக்காக போட்ட மரியாதை பதிவு" என்று சொல்லுபவர்கள்; மறுபுறம் "முதல்வர் விஜயை ஏற்க மனசில்லாத போஸ்ட்" என்று சாடுபவர்கள்.














Click it and Unblock the Notifications