2 மேஜர் மேட்டர்.. அவசரமாக இன்று டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி.. பின்னணியில் பரபர தகவல்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இன்று மாலையில் திடீரென்று டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். இந்நிலையில் தான் அவரது பயணத்தின் பின்னணியில் 2 முக்கிய விஷயம் உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி இருக்கிறார். இந்நிலையில் தான் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் மற்றும் கோப்புகளில் ஆளுநர் ஆர்என் ரவி கையெழுத்திடாமல் கிடப்பில் போடுவதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.

மேலும் தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடப்பில் போடுவது வருத்தமளிக்கிறது என உச்சநீிமன்றம் தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் இப்படிக் கூறிய நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து அந்த 10 மசோதாக்களையும் புள்ளி, கமா கூட மாற்றாமல் நேற்று தமிழக அரசு சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டி நிறைவேற்றியது.
நிறைவேற்றப்பட்ட இந்த 10 மசோதாக்களும் மீண்டும் தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரை பொறுத்தமட்டில் ஒரு முறை மட்டுமே அரசின் மசோதாவை திருப்பி அனுப்ப முடியும். 2வது முறையாக அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்நிலையில் தான் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள 10 மசோதாக்களுக்கும் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலைக்கு ஆளுநர் ஆர்என் ரவி தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தான் இன்று ஆளுநர் ஆர்என் ரவி அவசரமாக டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். இன்று மாலை 5.15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். நாளை வரை டெல்லியில் ஆளுநர் ஆர்என் ரவி இருக்க உள்ளார். அதன்பிறகு நாளை மாலையில் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வர உள்ளார்.
இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவியின் இந்த டெல்லி பயணத்தின் பின்னணியில் 2 முக்கிய விஷயம் உள்ளது. அதாவது தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு நாளை உச்சநீதமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதனை எதிர்கொள்வது குறித்து அவர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகவும் அவர் ஆலோசிக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவி இடையே ஏற்கனவே மோதல் உள்ள நிலையில் தற்போதைய இந்த நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications